பக்கம்:அமுதும் தேனும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

கவிஞர் சுரதா


"மீன்வியர்வை சிந்துவதே இல்லை, தண்ணீர்
வீட்டிலது வாழ்வதனால்" என்றான் வேந்தன்.
"நான்வியர்வை சிந்தியுள்ளேன் நாட்டுக் காக
நாடாளும் மன்னவனே" என்றான் கற்றோன்.
"தேன்வியர்வைப் பூக்களுக்குத் தூக்கம் வந்தால்
சிறுதும்பி உண்ணாநோன் பிருக்கும்" என்று
வான்வியர்வைப் பேரரசன் உரைக்க லானான்.
மாகவிஞன் அதைக்கேட்டு வியக்க லானன்,

நிலவரியை நான்குறைத்தேன்; இந்து மக்கள்
நெஞ்சத்தை நன்குணர்ந்து "ஜெஸியா" என்னும்
தலைவரியை நான்தடுத்து நிறுத்த லானேன்.
சமுத்திரத்தில் எழும்தண்ணீர்ச் சுவர்கள் என்னும்
அலைகளுக்கா வரிவிதிக்க முடியும்? கங்கை
ஆற்றினிடம் வரிகேட்டால் அதுவா நல்கும்?
சிலவரிகள் எப்போதும் இருந்தே தீரும் -
சிரிப்பதற்கு வரிவிதிக்க முடியா தன்றோ?

மாறுதலை உண்டாக்கத் துடித்தெ ழுந்த
மாவீரன் தைமூரின் வம்சம் தன்னில்,
ஆறுதலை முறைகட்குப் பின்னர் தோன்றி
அனைவரையும் வீரத்தால் வென்ற பாபர்.
சேறுபடித் திருக்கின்ற சமுதா யத்தைச்
சீர்திருத்தம் செயமுயன்றார். அதற்குப் பின்னர்
நூறுமுறை நான்முயன்றும் இன்னும் என்னால்,
நுனிக்கொம்பைப் பிடித்திழுக்க முடியவில்லை.