பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 அன்னையை மறைத்த சிலை உரையாடல் காலக்கணக்கைத் தாண்டிக்கொண்டிருந்த போது இவரை கூட்டிவந்தவர் குருநாதரின் காதில் கிசு கிசுத்தார். உடனே நாதரின் முகம் பற்றற்ற வெளிப்பாடானது. தொலைநோக்காய்ப் போனது. இவரை உள்ளுக்குள் தேடுவதுபோல் அவரது கண்ணொளி இவர் உடல் முழுக்கும் உட்புகுந்தது. மகிழ்ச்சியாகத் தலை ஆட்டியபடியே, இந்தப்புதிய சீடர்ருக்காக குருநாதர் ஒரு கண்ணாடித் தம்ளரில் நீரை நிரப்பினார். அதை இவர் கையில் கொடுத்தார். இவர் அந்த நீரைக் குடிக்கப்போன போது அவர் கையசைத்து தடுத்தபடியே இது உடல் தாகத்திற்காக அல்ல. உங்கள் ஆன்ம தாகத்தை தணிப்பதற்காக என்றார். ஏகாம்பரம் புரியாது விழித்தபோது, இவரிடம் அந்த கண்ணாடித் தம்ளரை உற்றுப் பார்க்கச் சொன்னார். நீரைத்தவிர எதுவுமே தென்படவில்லை. உடனே, குருநாதர் ஆணைப்படி, இவர் இடது கை பிடித்த தம்ளரை வலதுகையால் மூடினார். இந்த குருநாதரையே மனதில் நினைத்துக்கொள்ளச் சொன்னார். இரண்டு நிமிடம் கழித்து, தம்ளரை திறந்து பார்க்கச் சொன்னார். பார்த்தால் தம்ளரின் அடிவாரத்தில் சுருள்சுருளாய்-வட்டவட்டமாய், பாக்கு நிறத்தில் இடையிடையே பவளநிற சன்னக்கம்பியை காட்டியபடியே உத்திராட்சமாலை ஒன்று நீரில் மேல்நோக்கி நீந்துகிறது, ஏகாம்பரம் நெஞ்சுருகி, கண்ணுருகி அந்த மாலையையும், குருநாதரையும் மாறிமாறி நோக்கியபடியே, கையெடுத்துக் கும்பிட்ட போது, அந்த மாலையை எடுத்து குருநாதர் இவர் கழுத்தில் சூட்டினார். இவர் உடனே அவர் காலை தொட்டார். அவரோ இவர் மூளையைத் தொட்டார். குருநாதர் அன்று சொன்னது ஒவ்வொரு நாளும் உரத்துக்கேட்டது. நீங்கள் இதுவரை கற்றது. வீணே, பக்தி செய்தது பாழே. ஆனாலும் கவலைப்படவேண்டாம் இன்று முதல் நீங்கள் புதிய மனிதர். காலபோக்கில் ஞானப்பயிற்சியால் நீங்களே என்னைப்போல் ஒரு சித்தன் ஆகப்போகிறீர்கள்’ என்றார்.