பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 வாடாத பயிர் வாலிபன் பெருமாள் அமர்த்தலாகச் சிரித்தான். தொலைவில் தெரிந்தவன் வருவது வரைக்கும், பொறுக்கமுடியாதவன்போல், விடலை ராமன் பாலத்தின் மீதே எழுந்து நின்றான். தொள தொள என்று கட்டுமளவுக்கு கட்டுமானம் இல்லாத நாலு முழ வேட்டி, இடுப்பை விட்டு இறங்கப் போவதுபோல் லூசாக இருக்க, வெற்றிலை எச்சங்கள் நீலச் சட்டைக்கு சிவப்பு ஒட்டுத் துணிகள்போல் தோன்ற, நேராகப் பார்க்கத் தெரியாதவன்போல மேலும் கீழும் பக்கவாட்டிலும் பார்த்தபடி வேல்சாமி வந்து கொண்டிருந்தான். முப்பது வயதிருக்கலாம். அடியும், தலையும் ஒரே மாதிரியான உடலமைப்பு. சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற நிறம். துருத்திய கண்கள் அவிழப்போன வேட்டியைக் கட்டவேண்டும் என்ற உணர்வில்லாமலே, அதை வயிற்றுப் பக்கமாக ஒரு கையால் அனைத்துப் பிடித்து, வேல்சாமி எக்கி, எக்கி நடந்தான். வேல் சாமியிடம், அவர்கள் பேசவேண்டிய அவசியமில்லை; அவனே பேசினான். பேசும்போது வார்த்தைகள் மெதுவாகவும், எச்சில் வேகமாகவும் அதிமாகவும் வெளிப்பட்டுக்கொண்டிருந்தன. கேணத் தனமாகத்தான் கேட்டான். "என்ன இது. பாலத்தில் உட்கார்ந்திட்டியே! நான் வயலுக்குப் போகும்போதும் ஒக்காந்தியே! வரச்சிலயும் இருக்கிய" கிருஷ்ணன் பெளவ்விய பாவனையோடு பதிலளித்தார். "ஏதோ தெரிஞ்சு தெரியாம ஒக்கார்ந்துட்டோம்! நீ என்ன சொன்னாலும் கட்டுப்படுகிறோம்! என்ன செய்யணும்னு சொல்லு!" "நல்லா இருக்கே நாயம். மாமா சொல்லி மருமவன் செய்யனுமா மருமவஞ் சொல்லி மாமா செய்யனுமா?"