பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 17.3 மறக்கலிய" என்று குரல் தழுதழுக்கச் சொன்னாள். பின்பு அன்போடு பேசினாள். அவள் மகளான ஆராய்ச்சிக் காரிக்கு, நான் எதிர்பார்த்தது போல், திருமணமாகி, குழந்தைகளும் உற்பத்தியாகி விட்டதாம். ஆகையால் இப்போது, மாமியால், என் மீது வைத்திருக்கும் அன்பை, பயமில்லாமல் காட்ட முடிந்தது. ஆனால் என் கண்கள் மாமியிடம் இல்லை. காதுகள், அவள் பேசுவதைக் கேட்கவில்லை. ரமேஷ். என் ரமேஷ். எங்கே. எங்கே..? 'மாமி. ரமேஷ். நல்லா இருக்கானா? எங்க போயிருக்கான்? எப்ப வருவான்?" "டென்னிஸ் ஆடப் போயிருக்கான். இப்போ வர்ர நேரந்தான்." ஒவ்வொரு வினாடியும் இனிய எதிர்பார்ப்புடன் கழிய, நான் வாசலிலேயே விழிகளை விட்டு வைத்தேன். - ரமேஷ் வந்தான். சைட் பர்ன். பாகவதர் கிராப். தொளதொள பேண்ட். லூஸ் சட்டை. கையில் ஒரு சர்தார் ஜி காப்பு. ஆஜானுபாகுவான தோற்றம்: குறுந்தாடி. தொங்கு மீசை, ரமேஷ் பெரியவனாயிருப்பான் என்பதை நான் எதிர்பார்த்ததுதான். இருந்தாலும் இவன், என் ரமேஷ் மாதிரி தோன்றவில்லை. என் பத்து வயது ரமேஷ், என்னைப் பார்த்ததும் முகம் மலர் வானே, அந்த மலர்ச்சியை, ரோமங்களும் தாடி மீசைகளுக்குமிடையே இருந்த இந்த ரமேஷின் முகத்தில் கண்டு பிடிக்க முடியவில்லை. என் ரோஜா ரமேஷின் உதடுகளில் தவழுமே புன்னகை, அதை, சிகரெட் குடிப்பதாலோ என்னவோ கறுத்துப் போயிருந்த இந்த உதடுகளில் காண முடியவில்லை.