பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்றிப்பு என் மனம் முழுவதும், காக்கா மயமானது. கால் முழுவதும் நடைமயமானது. கேட்க வேண்டிய காதுகளே 'கா. கா...' என்று உரத்துப் பேசின. கண்கள் கூட அப்படித்தான். முன்னால், தன்பாட்டுக்குப்போன ஒரு பூக்காரப் பெண்ணின் கொண்டைகூட, ஒரு காக்கா போலவே தோன்றியது. அந்தச் சமயம் பார்த்து என்னை உரசிக்கொண்டு போன ஒரு தள்ளுவண்டியின் கழிசல் கம்பிகள் கூட காகத்தின் நகக்கால்களாய் தோற்ற மாற்றம் காட்டின. ஆங்காங்கே ஆகாயத்தில் வட்டமடித்தும், கடைகண்ணிகளின் முன்னால் லாவகமாய் குதித்துக் குதித்து நகரும் காகங்கள், நான், பல்லாண்டுகளுக்கு முன்பு, காகக்கும்பலால் கொத்திக் குதறப் படும் மனிதர்களை சித்தரிக்கும் ஒரு ஆங்கில திரைப்பட நினைவை அங்கேயே நடக்கப்போகும் நிகழ்ச்சிகளாய் உருவகப்படுத்தின. நான் காதுகளுக்கு மானசீகமாய் தாளிட்டு, நடந்தேன். மனம் போன போக்கில் கால்கள் போகாமல், அவை தானாக உடம்பை இழுத்துக் கொண்டு போயின. மூலச் சென்னையின் கிழக்கெல்லையான அடையாறு முனையில் மாட்டுத் திமிங்கலம் போன்ற பாலத்தில் ஏறி, மறுபக்கம் இறங்கினேன். எவ்வளவு தூரம் நடக்க வேண்டுமோ, அவ்வளவு தூரம் திரும்பி நடக்க வேண்டும் என்று வழக்கம்ாய் எச்சரிக்கும் மூளைகூட காக்கை வசமானது. இதுவும், தன் பங்கிற்கு, அகத்தில் குத்திக் கொண்டிருந்தது.