பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118 அன்னையை மறைத்த சிலை இருக்கலாம். ஆன்மாவின் துருப்பிடித்த வாசனையாகவும் இருக்கலாம். மூளைக்குக் கட்டுப்படாத மனமோ... மனத்திற்கு கட்டுப்படாத உடலோ, ஏன் வந்தோம் என்பது தெரியாமலேயே எப்படியோ வந்து விட்டார். அன்று ஞாயிற்றுக்கிழமை. ராகுகால மாலை நேரந்தான். ஆனாலும் ஆளரவும் இல்லை. செவ்வாய்க் கிழமை பிற்பகலிலும் வெள்ளி முற்பகலிலும் அலை மோதும் கூட்டத்தில் ஒரு ஆள்கூட தலை காட்டவில்லை. சுதந்திர தினத்திற்கு, விடுமுறை விடப்படுவதால், அலுவலகங்களில் அதற்கு முந்திய நாளே அந்தத்தினத்தை கொண்டாடி முடித்து, நாட்டிற்குத் தங்களை மீண்டும் அர்ப்பணித்துக்கொள்ளும் அரசு ஊழியர் குடியிருப்புப் பகுதியில் இந்த கோவில் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். தொலைக்காட்சியில் கார்க்கில் கலைநிகச்சி அந்த சமயம்பார்த்து ஒளிப்பரப்பு செய்யப்பட்டதால், வழக்கமாக வரும் பெரியவர்கள் கூட அன்று அம்மனை கைவிட்டார்கள். அனாதியானவள், அனாதையானாள். அன்றைக்கு மட்டும் சிலையானால், கசங்கிப்போன சிவப்பு உடுப்பு. குங்குமம் உலர்ந்து அதன் வட்டத்தைக் காட்டும் நெற்றிக்கல். சருகாய் உதிர்ந்து கொண்டிருக்கும் முன்னைய இளம்பூக்கள். தாயானவள், தன்பிள்ளைகளைக் காண வில்லையென்று வெளியே வந்து எட்டிப்பார்த்து விடக்கூடாது என்பதற்காகவோ என்னவோ இருபுறத்து சாளரக்கதவுகளும் ஒன்றாக்கப்பட்டு இருந்தன. இதுவே, ஏகாம்பரத்திற்கு நல்லதாய்ப் போயிற்று. நடைவழியான அந்த இடம் பொருத்தமாகப்பட்டது. எதிர்புரத்துச் சுவரோடு சுவராய் உட்கார்ந்தார். ஆனாலும் வசதிப்படவில்லை. எதிரே பார்த்தால் துர்க்கைச்சிலை, வலதுபக்கம் பார்த்தால் வள்ளி-தேவானை சகிதமான முருகச்சிலை, இடப்பக்கம் பார்த்தாலோ லிங்கங்கள். இவை அவரது பயிற்சிக்கு ஆகாதவை.