பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160 ஒன்றிப்பு இப்படிக் குறிப்பிடுவதால், நான், காக்கா போபியா’வில் சிக்குண்ட மனநோயாளி என்று அர்த்தமல்ல. தண்ணிருக்குள் கூட தடம் பதிக்கும் வல்லமை கொண்டவன் நான் என்று நண்பர்கள் சொல்லுகிறார்கள். மனம் என்பது, நெருப்புபோல், எதையாவது பற்றி நிற்க்கக்கூடியதே அன்றி, தனித்து நிற்பதல்ல என்பதை உணர்ந்தவன். அனாவசியங்களில் பதியும் மனதை, ஆரோக்கியங்களில் திருப்பி விடுகிறவன். ஒரு விவகாரத்தை, அடி முதல் நுனிவரை அலசிப்பார்க்கிறவன். அதனால்தான் இந்த காக்கா விவகாரத்தை நினைத்தபடியே நடக்கிறேன். இது புதை மண்ணாகி விடக் கூடாது என்பதற்காக திறந்தவெளியில் நடந்து மனதை திறந்து பார்க்கிறேன். நான் சுயமாய் கட்டிய வீடு, பெங்களூரில் இருந்து பதினைந்தாண்டுகளுக்கு முன்பு, இதே இந்த சென்னை வீட்டின் தளத்தில் நானே நட்ட தென்னங்கன்று. இன்று, வளர்வது தெரியாமலேயே வளர்ந்து, இப்போது இரண்டாவது மொட்டை மாடித்தளத்தின் எல்லைப்புரச் சுவரில் உராய்ந்தபடியே அதற்கும் மேலோங்கி நிற்கிறது. ஆனாலும் என் வீட்டில் - என் தென்னையில் கூடு கட்டியிருக்கும், இரண்டு காகங்கள், என்னை குறிவைத்து அடிக்கின்றன. கால்களை மடித்தோ அல்லது நீட்டியோ தலையில் குட்டுகின்றன. மோதிர குட்டல்ல. நகக்குட்டு. அதே சமயம், இதே மொட்டை மாடிக்கு அவள்” துணிமணிகளை காயப் போடவும் அந்தக் காலத்து மகாராணி போல் மொட்டைமாடித் தேரில் நின்று அக்கம்பக்கம் பார்ப்பதற்காகவும் பொழுதுக்கு இருபது தடவையாவது வருகிறாள். இவளை இந்த காகங்கள் ஏறிட்டுப் பார்ப்பதில்லை. நான், அருட்பெருஞ்ஜோதி கேசட்டுகளை போடும் டேப்ரிகார்டரில், நான் இல்லாத சமயத்தில் ‘காதலா காதலா வகையறாப் பாடல்களை போட்டு ரசிக்கும் என் மகனையோ, பாடப்புத்தகத்தைப் படிப்பதாக பேர் பண்ணிக்கொண்டு, மொட்டை மாடியை