பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சமுத்திரம் 127 சாமியார், சிலருக்கு விபூதியை எடுத்து நெற்றியில் பூசினார்; சிலருக்குக் கையில் கொடுத்தார். சிலரைத் தாங்களாகவே எடுத்துக் கொள்ளும்படி சைகை செய்தார். அவரால் நெற்றியில் விபூதியிடப்படுபவர்கள் அதிர்ஷ்டக் காரர்கள் என்பதும், அவர்களைத்தான் சாமியாருக்கு அதிகமாகப் பிடித்திருக்கிறது என்பதும் மக்களின் எண்ணம். ஆகையால் கார்த்தி உட்பட அனைவரும், அவர் கையில் நெற்றியில் விபூதி வாங்கவே விரும்பினார்கள். சாமியார் வீராசனத்தில் உட்கார்ந்திருந்தார். குறைந் த பட்சம் எண்பது வயது இருக்கும். ஆண்டுக்கணக்கில் அந்த இடத்திலேயே உட்கார்ந்து இருந்ததால், கால்கள் செயலி ழந்து போனதுபோல் தோன்றின. அவர் குடிகொண்ட இடம், அந்த குக்கிராமத்தில் ஒரு சிறு திண்ணை. அவர் தலைக்கு மேல் முருகன் படமும், சிவலிங்க படமும் மாட்டப்பட்டிருந்தன. ஒரு பூனைக்குட்டி அவர் மடியில் புரண்டு கொண்டிருந்தது. சாமியாரின் முகத்தைப் பார்த்தால், பிரபஞ்சத்தையே பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும். தந்தை ஈ.வே.ரா-வைப் போல் தங்க நிறத்தில் மேனி விளங்க, தாடி வெள்ளி ஜரிகைபோல் பளபளத்தது. கும்பிடுபவர், கும்பிடாதவர் அத்தனை பேரையும் பற்றிக் கவலையற்றவராய், வேண்டுதல்-வேண்டாமைக்கு இலக்கணம்போல் திகழ்ந்த அவரைப் பார்த்தாலே பாவங்கள் பொடியாகும். இனம் காண முடியாத ஒருவித பேரமைதி அவரைச் சூழ்ந்து நின்றது. எவராவது அவர் காலைப் பிடித்து முத்தமிடும்போதும் சரி, முன்னால் நின்று தோப்புக்கரணம் போடும்போதும் சரி, அவர் எதையோ ஒன்றை ஊடுறுவி ஆராய்வதுபோல் மேற்கூரையைப் பார்ப்பார். மொத்தத்தில், நிர்குணனான இறைவன், இதைவிட ஒரு சிறந்த மகானைப் படைத்திருக்க முடியாது என்ற ஞானவுணர்வுதான் ஒருவருக்கு ஏற்படும். வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தத்தம் குறைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சாமியார், நல்லது போய் வாங்க', 'சரி என்ற இரண்டு