பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தித்திய பாலன் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், டில்லி வரைக்கும் தடம் புரளாமல் ஒடுமா என்ற நியாயமான சந்தேகங்கூடத் தோன்றாமல், முதல் வகுப்புப் பெட்டியில், எனக்குள்ளேயே நான் மூழ்கியிருந்தேன். வெளியே குட்கோட் போட்ட 'பிளாட்பார ஆசாமிகள், சம்பந்தப் பட்டவர்களுக்குப் பிரிவுபசார உணர்வுகளை வெளிக்காட்டிக் கொண்டிருக்க, சிலர், பல்லவ பஸ்ஸை விடப் படுவேகமாகப் பறந்து கொண்டிருந்தனர். பேரத்தை மீறிய போர்ட்டர்கள், பேரம் பேசாமல் பெட்டியில் சாமான்களை ஏற்றிவிட்டு போர்ட்டரை டபாய்க்கும் பிரயாணிகள், பிரயாணிகளை டபாய்க்கும் போர்ட்டர்கள், விசில் சத்தங்கள், 'யுவர் அட்டன்ஷன் பிளிஸ்கள் - ஆகிய எந்த அமர்க்களமும், என் காதில் மோதியிருக்கலாம். ஆனால் மூளையில் மோதவில்லை; இதனால், எனக்கு மூளை இல்லை என்பதல்ல. என் மூளையிலும், அதிலிருந்து புறப்பட்ட, முதுகுத் தண்டிலும், 'உட்செல்', 'வெளிச்செல்' நரம்புகளிலும் இதயத்தின் 'ஆரிக்களிலும்’ வென்டிரிக்களிலும், ஒரே ஒரு பையன் மட்டுமே விசுவரூபமாக வியாபித்திருந்தான். மறுநாள் டெல்லிக்குச் சென்றதும், பத்தாண்டு வரை பார்க்கத் துடித்தும், பார்க்க முடியாமல் போன, என் மருமான் ரமேஷைப் பார்க்க வேண்டும். பார்க்காமல், எப்படி இன்னும் ஒன்றரை நாட்கள் இருக்க முடியும் என்ற இயலாமையால் நான் இருப்புக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.