பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ፫47 பொன்னம்பலம், இடுப்பளவு முருகபடம், திருமண காலத்தில் வாங்கப்பட்டதால் ஏற்பட்ட சென்டிமென்டில் அல்லாடி அதைவிட்டு விட்டு கீழே குனிந்து சுவர் மூலையோடு மூலையாய்க் கிடந்த திருப்பதி ஏழுமலையான் படத்தை கையகப்படுத்தப் போனார். அதற்காக நீண்ட வலதுகரம், இடதுகரத்தோடு பின்னிக் கொண்டது. இது வெறும்படமா. வெத்துவேட்டா. குபேரனிடம் கடன்பட்டு, ஏழுமலைக்கு கழிவிரக்கமாய் வந்தவர் திருப்பதி ஆண்டவன் என்பது நம்ப முடியாத புராணப் புளுகு. ஆனால், இது வாங்கப்பட்ட பின்னணி, பொன்னம்பலம் நினைவு கூர்ந்தார். அவருக்கு பெங்களூரில் இருந்து, அவர் விரும்பியபடி சென்னைக்கு மாற்றல் வந்த சமயம் பல்வேறு நியாயமான காரணங்களுக்காக, கணிசமாய் கடன்பட்டிருந்தார். சாட்சி இல்லை, ஆனாலும் வாங்கிய கடனை அடைக்காமல் போக மனமில்லை. டில்லி மேலிடத்திற்கு பத்தாயிரம் ரூபாய் முன் பணம் கேட்டு, விண்ணப்பித்து விட்டார். பணம் கிடைக்க மூன்று மாத காலமாகும். அதற்குள் சென்னைக்கு, இன்னொருத்தன் போயிடுவான். காத்திருந்தவன் காதலியை நேற்று வந்தவன் கொண்டு போன கதையாகும். அவர் தனக்குள்ளே குமைந்து கொண்டிருந்தபோது ஒரு நண்பர் அவரை ஆள்துணையாக திருப்பதிக்கு கூட்டிப் போனார். அதிகாலை மூணு மணியளவில் சரஸ்வதி தேவி மகாவிஷ்ணுவிற்கு வீணை இசைப்பதாகக் கருதப்படும் பிரும்ம முகூர்த்த காலத்தில், கோவிலின் உட்பிரகாரத்திற்குள் சென்றவர், நண்பருடன் கவிழ்ந்து பார்த்த ஏழுமலையான நிமிர்ந்து பார்க்கிறார். பணமுடையால் ஏற்பட்ட நடைமுறையைச் சொல்லிச் சொல்லி விண்ணப்பிக்கிறார். பின்னர் வெளியேறுகிறார். கோவில் மதில் சுவர்ப்பக்கம், ஒரு நிர்வாகப் பொறியாளர்.