பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 225

'இப்ப என் கடவுள் நீங்கதான் டாக்டர்' என்று அவர்

கால்களில் விழாத குறையாகக் கெஞ்சினான் ராஜாராமன். போகும் போதும் வரும்போதும், மெயின் ரோடிலிருந்து கூப்பிடு தூரத்தில் ஆசிரமம் இருந்தும், அவசரம் காரணமாக, அவனால் பிருகதீஸ்வரனுக்கோ மற்றவர்களுக்கோ தகவல் சொல்ல முடியவில்லை. அந்த நள்ளிரவில் மேடும் பள்ளமுமான நாகமங்கலம் சாலையில் எவ்வளவு வேகமாகப் போக முடியுமோ அவ்வளவு வேகமாகக் கார் போயிற்று. டாக்டர் அமைதியாயிருந்தார். அவரிடம் அதிகம் பேசினாலும் கோபித்துக் கொள்வார் போலிருந்தது. பேசாமலும் இருக்க முடியவில்லை. தெய்வங்களை எல்லாம் மனத்திற்குள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான் அவன். ஒர் அநாதையைப்போல் அவன் இதயம் நிராதரவாய் அழுதது. கார் நாகமங்கலத்தைக் கடந்து மலைச் சாலையில் ஏறி மேல் வளைவில் திரும்பிய போது, டாக்டர் டார்ச் ஒளியைப் பாய்ச்சிக் கைக்கடிகாரத்தில் மணி பார்த்தார். மணி இரண்டே கால் ஆகியிருந்தது. சாலை மேல் மலைச்சரிவில் இருந்த மாந்தோப்புக்களில் காவல் நாய்கள் கார் சத்தத்தில் குரைத்தன. மலைச்சாரற் பணி சில்லென்று உறைந்தது. சிள்வண்டுகளின் ஒசையை வெட்டுவதுபோல் எங்கோ ஒர் ஆந்தை அலறி ஓய்ந்தது. தூரத்தில் நாய் அழுது தணியும் ஒலி இருளில் கோரமாகக் கேட்டது. ராஜாராமன் செவிகளைப் பொத்திக் கொண்டான். அவன் மனம் வேகமாக அடித்துக் கொண்டது. . . . . - .

மலைச்சரிவில் பங்களா வாசலில் போய்க் கார் நின்ற போது எல்.எம்.பி. டாக்டர் மாட்டு வண்டியில் திரும்பிப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் காரிலிருந்து இறங்குவதற்குள் வண்டி நகர்ந்து விட்டது. வீட்டில் எல்லா விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன. வாசலில் பெட்ரோமாக்ஸ் லைட் ஒளியில் ஈசல்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. கட்டை மாட்டு வண்டியில் சக்கரங்கள் தொலைவில் நகரும் ஒலியைத் தவிர பங்களா அமைதியாயிருந்தது. டாக்டர் படிகளில் தயங்கினார். வாசலில் யாருமே இல்லை.

ஆ.ரா - 15