பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விட்டுக் கணக்கும். ஆகாயக் கணக்கும். "நானும் ரெண்டு நாளாய் பார்க்கேன். நீங்க சாமி கும்பிடலியே! ஆபிஸ்ல ஏதும் பிரச்சினையா ஒருவேள ஒங்க சாமிகளாலகூட தீர்க்க முடியாத விவகாரமா?" படுக்கையறையில் இருந்து எழுந்ததும் முகம் கூட கழுவாமல், நேராய் சாமியறைக்குப் போய் ஒரு சல்யூட் அடிப்பவர், குளித்து முடித்ததும் அதே அறைக்குள்போய், பக்தியின் உச்சாணியில் நின்று, சாமி கும்பிடுகிறவர். அப்படிப்பட்டக் கணவன், அந்த அறையைத் திரும்பிப் பாராமல் இருப்பதில், கோலவடிவுக்கு ஆச்சரியமேயன்றி பயமல்ல. இன்னும் சொல்லப்போனால், ஒரு வகையில் மகிழ்ச்சி. ஒருநாளில் தொண்ணுற்று ஒன்பது சதவீதமாவது, சையால் தன்னிடம் தோழமையுடன் பழகுகிறவர். இந்த சாமியறையில் இருந்து வெளிப்படும் வரைக்கும், அவளிடம் சிடுசிடுப்பாய் இருக்கிறவர். கடந்த இரண்டு நாட்களாக, தோழமைப் பாசம் நூறு சதவிகிதமானது. இரண்டு நாள் நிறைவாக இருந்தவளுக்கு, இன்று லேசான அச்சவுணர்வு. சாமிகளை விட்டு விட்டதற்காக அல்ல, விடுவதற்கான காரணம்? இயல்பிலேயே நேர்மையாகவும், வெளிப் படையாகவும் உள்ள அவருக்கு, அலுவலக விவகாரம், விகாரப்பட்டிருக்குமோ என்ற அச்சம். அதற்கு ஏற்றாற் போல், மோவாயை நீட்டி வைக்கிறார். தனக்குத்தானே ஏதோ பேசிக் கொள்கிறார்.