பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 67

'வீட்டுக்குப் போயிருந்தாலும் பரவாயில்லை. பத்தர் வீடு பக்கத்திலேயே செம்பியன் கிணற்றுச் சந்திலேதான் இருக்கிறது, அங்கேயே போய்ச் சாவியை வாங்கிக் கொண்டு வந்து விடலாம்...'

-இந்த முடிவுக்கு வந்ததும் அவன் வடக்கே திரும்பிக் கோபுர வாசலிலிருந்து சித்திரை வீதிக்கு நடந்தான். அவன் நினைத்தபடி பத்தர் கடை பூட்டப்பட்டிருந்தாலும், நல்ல வேளையாக வாசக சாலை மாடியில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. யாரோ வாசக சாலை மாடியில் இருப்பதை அறிய முடிந்தது.

வாசக சாலைக்காக மேலே படியேறியபோது மாடிக் கதவு தாழிட்டிருந்தது. கதவை மெதுவாகத் தட்டினான் அவன். உள்ளே கேட்ட பேச்சுக் குரல்களிலிருந்து நாலைந்து பேர் கூடியிருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது. கதவைத் திறந்ததே முத்திருளப்பன்தான். நண்பனை அப்படியே கட்டித் தழுவிக் கொண்டான் ராஜாராமன். குருசாமியும், அந்நியத் துணி மறியலில் அவனோடு கைதான உள்ளூர் நண்பர்களும், பத்தரும் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். வாசகசாலையில் இப்போது ஐந்தாறு பழைய மடக்கு நாற்காலிகளும், இரண்டு புத்தக அலமாரியும், ஒரு பெரிய மேஜையும் இடம் பெற்றிருப்பதைக் கவனித்து ஆச்சரியப்பட்டான் அவன். இடத்துக்கு வாடகை கொடுக்க முடியாமல் வாசக சாலையே நடக்க முடியாது நின்று போயிருக்குமோ என்று பயந்தவனுக்கு, அப்படி இல்லை. வாசக சாலை நடக்கிறது’ என்று பத்தர் வேலூரில் வந்து சொல்லி, நிம்மதி அளித்திருந்தார். இப்போது இந்த வளர்ச்சி அவனுக்குப் புதுமையாய் இருந்தது. நண்பர்கள் எல்லாரும் அவனை உற்சாகமாக வரவேற்று அளவளாவினார்கள். பத்தரைத் தவிர மற்றவர்கள் இப்போதுதான் அவனைப் பார்க்கிறார்கள். ஆதலால் அவன் தாய் இறந்ததைப் பற்றித் துக்கம் கேட்பதில் சிறிது நேரம் கழிந்தது. துக்கப் பேச்சுத் தொடங்கியதுமே அங்கிருந்த கலகலப்புப் போய்விட்டது.