பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 197 அங்கே இல்லாததை அவன் ஏமாற்றத்தோடும் அதிர்ச்சியோடும் எதிர் கொண்டான். ஒரிரு கணங்கள் ஒன்றுமே புரியாமல் அவன் மனம் குழம்பியது. தலை சுற்றியது. யாரை விசாரிப்பதென்றும் விளங்கவில்லை. மனத்தைச் சமாளித்துக் கொண்டு மளிகைக் கடையில் விசாரித்த போது, ரத்தினவேல் பத்தர் காலமாகி விட்ட செய்தியும் கில்ட் கடை தெற்காவணி மூலவீதிக்கு மாறிப் போயிருப்பதும் தெரிந்தது. வாசகசாலையைப் பற்றி அவர்களுக்கு ஒரு விவரமும் தெரியவில்லை. சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருந்த ராஜாராமனுக்கு மறுபடியும் சிறைக்கே போய் விட்டது போலிருந்தது. பத்தருக்காக அவன் கண்களில் நீர் நெகிழ்ந்தது. மதுரத்தைப் பற்றி மளிகைக் கடையில் விசாரிப்பது உசிதமில்லை என்று எண்ணியபடி பக்கத்து ஒண்ணாம் நம்பர்ச் சந்தில் நுழைந்தவன், அவளுடைய அந்த வீட்டையும் திகைப்போடு பார்த்தான். காரணம், அந்த வீடும் இடித்துப் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. வேலை செய்து கொண்டிருந்த ஆட்களுக்கு மதுரத்தைப் பற்றித் தெரியுமோ, தெரியாதோ என்று தயங்கி நின்றான் அவன். அவளே வேறு இடத்திலிருந்து கொண்டு வீட்டை இடித்துக் கட்டுகிறாளா, அல்லது வேறு யாராவது விலைக்கு வாங்கிக் கட்டுகிறார்களா என்பதையும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லாம் குழப்பமாகவும், தன்னைத் தொடர்ந்து ஏமாற்றம் அடையச் செய்யவுமே நடப்பது போலவும் தோன்றின. அநாதைபோல் திரும்பி வந்து சித்திரை வீதியில் நின்று மீனாட்சி கோவில் கோபுரங்களைப் பார்த்தான். அவன். திடீரென்று அந்தக் கோபுரங்களே இல்லாத மதுரையைக் காண்பது போல் அவன் கண்கள் பிரமையடைந்தன. கண்களுக்கு முன் எதுவுமே தெரியாமல் இருண்டுவிட்டது போலிருந்தது. மறுபடியும் மளிகைக் கடைக்காரரிடம் சென்று பத்தருடைய கில்ட் கடையைத் தெற்கு ஆவணி மூலவீதியில் எந்த இடத்திற்கு மாற்றியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முயன்றான் ராஜாராமன், மளிகைக் கடையில் இருந்தவர்களுக்கு அந்த விவரம் ஒன்றும் தெரியவில்லை. . . . . . .