பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 89 காரைக்குடியில் விடைபெற்றுக் கொண்டு புறப்படும்போது பிருகதீஸ்வரன் தன்னிடம் கதர் விற்பது பற்றிக் கூறி அனுப்பியிருந்தது மீண்டும் ஞாபகம் வந்தது.

'முத்திருளப்பன்! நாளைக்கு வஸ்திராலயத்துக்குப் புறப்படறப்போ, இங்கே வந்து போங்க. நானும் உங்களோட வரேன்' என்றான் ராஜாராமன்.

'நீ வரணுமா, ராஜா? மாகாண மகாநாட்டு வேலை, ஊர்வல ஏற்பாடு எல்லாம் இருக்கே, அதையெல்லாம் கவனிக்க வேண்டாமா நீ?' - என்றார் முத்திருளப்பன். 'இருந்தாலும் பரவாயில்லை கொஞ்ச நாழி சுற்றலாம் - என்று ராஜாராமன் பிடிவாதம் பிடித்தான். மாகாண மாநாட்டு வேலைக்காக வெளியே சுற்றிப்பார்க்க வேண்டியவர்களை அன்று மாலையிலேயே பார்த்தார்கள் அவர்கள். சுப்பராமன் அவர்களையும் ஜோசப் சாரையும் பார்த்துச் சில யோசனைகளைக் கேட்டுக் கொண்டார்கள். வைத்திய நாதய்யர் வேறு வரச் சொல்லியிருந்தார். ஏழரை மணிக்குச் சந்தைப் பேட்டைத் தெருவிலிருந்து முத்திருளப்பனும், குருசாமியும் மற்ற நண்பர்களும் விடை பெற்றுக் கொண்டு போய்விட்டார்கள். வாசகசாலைக்குப் போவதற்கு முன் ராஜாராமனுக்குச் சொந்தத் தேவைக்காகச் சில சாமான்கள் வாங்க வேண்டியிருந்தது.

மதுரையில் வீட்டை ஒழித்துச் சாமான்களை மேலுரில் கொண்டுபோய்ப் போடுவதற்கு முன் பத்தர் ஞாபகமாக அவனுடைய துணிமணிகள், புத்தகங்கள் அடங்கிய டிரங்குப் பெட்டியை வாசகசாலையில் கொண்டு வந்து வைத்திருந்தார். ஆனாலும், தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ள ஒரு வாளி, அவசரத்துக்கு வெந்நீர் வைத்துக் கொள்ள ஒரு சிறிய கரியடுப்பு எல்லாம் வாங்க வேண்டியிருந்தது. புது மண்டபத்துக்குப் போய் இந்தச் சாமான்களை வாங்கிக் கொண்டு, கீழவாசல் வழியாய் வடக்காடி வீதி வந்து குறுக்கு வழியில் வாசக சாலையை அடையும் போது மணி எட்டரை ஆகியிருந்தது.