பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 187 போராட்டம் மகாத்மா எதிர்பார்த்ததற்கு மாறாக வன்முறைகளுக்குத் திரும்பி விட்டது. தேசபக்தர்கள் அங்கங்கே தடியடிக்கும், சித்திரவதைக்கும், மான பங்கத்துக்கும் ஆளாயினர். ஒரு பாவமுமறியாத பொது மக்கள் சுட்டுத் தள்ளப்பட்டனர். நாடெங்கும் ஒரு பஞ்சாப் படுகொலைக்குப் பதில் பல பஞ்சாப் படுகொலைகளை அரசாங்கம் நடத்தத் தொடங்கியது. பெண் தேசபக்தர்கள் சொல்லக் கூசும் மானபங்கங்களுக்கு ஆளாயினர். இரண்டொரு மாகாணங்களில் ஒரு போர் நடத்துவது போலவே விமான மூலம் வெடி குண்டுகளை வீசி அடக்க முயன்றது அந்நிய அரசாங்கம். பொதுமக்களுக்கும், தேசபக்தர்களுக்கும் வேறுவழியில்லாததால் பழிக்குப் பழி வாங்கும் அதீத வெறி மூண்டது. பாலங்கள் தகர்க்கப்பட்டன. ரயில் தண்டவாளங்களை அழிக்க முற்பட்டனர். எங்கும் அமைதியின்மை உருவாயிற்று. தேசபக்தர்கள் அமைதியாக நடத்த முயன்ற கூட்டங்களையும் அடி உதையின் மூலம் அடக்க முற்பட்ட சர்க்காரின் வெறியினால், அதுவரை அமைதியையும் சாத்வீகத்தையும் நம்பிக் கொண்டிருந்தவர்களும் ஆவேசமான காரியங்களில் இறங்கும்படி ஆயிற்று. இப்படி 1942 போராட்டம் ஒரு சுதந்திர மகாயுத்தமாகவே ஆகிவிட்டது. -

பம்பாயில் தலைவர்களும், தேசபக்தர்களும் கைதான செய்தி மதுரையில் பெரும் குமுறலையும் பரபரப்பையும் உண்டாக்கியது. உடல் நலம் குன்றிப் படுத்த படுக்கையாயிருந்த ரத்தினவேல் பத்தரைப் போய்ப் பார்த்து விட்டுக் கமிட்டி ஆபீஸுக்குச் சென்ற ராஜாராமன், அங்கே சிதம்பர பாரதியோடு பேசிக் கொண்டிருந்த போது, போலீஸார் வந்து இருவரையுமே கைது செய்தார்கள். மறுநாள் மதுரை நகரமே அமளி துமளிப்பட்டது. தேசபக்தியின் ஆவேசம் எங்கும் பொங்கி எழுந்தது. கடை அடைப்பு, வேலை நிறுத்தம் என்று எதிர்ப்புக்கள் எழுந்தன. திலகர் சதுக்கத்தில் மாபெரும் கூட்டம் திரண்டது. கூட்டத்தைச் சுற்றி ஒரே போலீஸ் மயம். அவசர அவசரமாக 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேங்காட்டுப் பொட்டலில்