பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 ஆத்மாவின் ராகங்கள்

உழைக்கிறாங்க. அதனாலே, இந்தப் பேரே பொருத்த மாயிருக்கும்னு நினைச்சேன் நான்' என்று அவருக்குச் சமாதானம் சொன்னேன்.

'மதுரத்தை நெனைச்சு இப்படிப் பேர் வச்சீங்களோன்னு தோன்றியது எனக்கு."

'அப்படியும் நான் நினைத்ததுண்டு. உங்கள் கருத்துப் படிப் பார்த்தாலும் அவள் காந்திராமனுக்காகச் செய்த விரதத்தையே இதன் கதாபாத்திரங்கள் அனைவரின் விரதங்களுக்கும் மேலான விரதமாக நான் நினைக்கிறேன்.

நான் கூறியதைக் கேட்டு முத்திருளப்பன் புன்முறுவல் பூத்தார். ஆசிரமத்தில் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு புறப்படுமுன் மீண்டும் கடைசியாகப் பெரியவரின் அறைக்குப் போய் அந்த வீணையையும் அவருடைய கட்டிலையும், பொருட்களையும், டைரிகளையும் பார்த்தேன்.

இணையற்ற சகாப்தத்தின் நினைவுச் சின்னங்களாக அவை தோன்றின. 'மறுபடியும் பாரதமாதாவின் முகத்தில் புன்முறுவல் பூக்கச் செய்ய இப்படி மகாவிரதங்களை நம்புகிறவர்கள் தோன்ற வேண்டும். பனி உருகி இமயம் அழிந்து விடக்கூடாது; அழியவும் அழியாது. கங்கை பிறக்கும்; பிறக்க வேண்டும். எந்த மண்ணில் இறங்கும் ஒவ்வொரு மழைத் துளியும் கங்கையாகிறதோ அந்த மகான்களின் தியாகங்கள், இந்தப் பாரத புண்ணிய பூமியில் உரமாயிருந்து எதிர்காலப் பயிர் என்ற சுபீட்சத்தை வளர்க்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு அங்கிருந்து புறப்பட்டேன் நான். இந்தக் கதையைப் படிக்கும் வாசகர் நினைவிலும் அந்தரங்க சுத்தியோடு இதே பிரார்த்தனை ஏற்படவேண்டுமென்று பரிபூரணமாக நான் ஆசைப்படுகிறேன். -

★ - ★ ★