பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 ஆத்மாவின் ராகங்கள் பாதித்திருப்பதாக எழுதியிருந்தார் அவர். தானும் தன் மனைவியுமாகப் புதுக்கோட்டைச் சீமையில் ஊர் ஊராகச் சென்று கதர் விற்பனைக்கும், சுதேசி இயக்கத்திற்கும் முடிந்தவரை பாடுபட்டு வருவதாகவும், மாகாண மாநாட்டின் போது மதுரை வரமுடியாவிட்டாலும்,

முடிந்தபோது அவசியம் மதுரை வருவதாகவும் கடிதத்தில் விவரித்து எழுதியிருந்தார், அவர். அந்தக் கடிதத்தை அவன் பிரித்துப் படித்துக் கொண்டிருந்த போது மதுரம் வந்ததால் அதை அவளிடமும் படிக்கக் கொடுத்தான் அவன். பிருகதீஸ்வரனின் கடிதத்தைப் படித்துவிட்டு அவரைப் பற்றி ஆர்வமாக விசாரித்தாள். சிறை வாழ்க்கையில் அவரோடு கழித்த இனிய நாட்களையும், வேளைகளையும் சுவாரஸ்யமாக அவளுக்கு வருணித்துச் சொன்னான் அவன்.

மறுநாள் அதிகாலையில் மேலுர் போய்ப் பத்திரம் பதிந்து கொடுத்துவிட்டுப் பாக்கிப் பணத்தையும் வாங்கி வரப்போவதாக முதல் நாளிரவே மதுரத்திடம் சொல்லி யிருந்தான் அவன். அதனால் அவன் எழுவதற்கு முன்பே அவள் காபியோடு வந்து, அவனை எழுப்பிவிட்டாள்; சீக்கிரமாகவே அவன் மேலுர் புறப்பட முடிந்தது.

அம்பலக்காரர் ஸ்டாம்ப் வெண்டரைப் பிடித்துப் பத்திரம் எல்லாம் தயாராக எழுதி வைத்திருந்தார். சப்-ரிஜிஸ்திரார் ஆபீஸிலும் அதிக நேரம் ஆகவில்லை. முதல் பத்திரமாக ராஜாராமனின் பத்திரமே ரிஜிஸ்தர் ஆயிற்று. ரிஜிஸ்திரார் முன்னிலையிலேயே பாக்கி ஏழாயிரத்தையும் எண்ணிக் கொடுத்து விட்டார் அம்பலக்காரர். சப்-ரிஜிஸ்திரார் ஆபீஸ் படியிலிருந்து இறங்கியபோது, பிறந்த ஊரின் கடைசிப் பந்தமும் களையப்பட்டு விட்டது போல ஒருணர்வு நெஞ்சை இலேசாக அரித்தது. வீட்டில் வாடகைக்கு இருக்கும் உரக் கம்பெனிக்காரனுக்கு வீட்டை விற்று விட்டதை அறிவிக்கும் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுக்கும்படிக் கேட்டார் அம்பலக்காரர். அப்படியே ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தான் ராஜாராமன். மேலுர் நண்பர் பகல் சாப்பாட்டை அங்கேயே தன்னோடு சாப்பிட்டுவிட்டுப்போக வேண்டும் என்றார்.