பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 91 வேல்சாமி, கையை மட்க்கிக்கொண்டு புறப்பட்டான். இடும்பனுக்கு அடுத்தபடியாக 'முருகன் தன்னை நேசிப்பதில் அவனுக்கு தாளாத மகிழ்ச்சி. ஊர் மத்தியில் இருந்த முருகன் கோவிலை முதன் முறையாக முழுமையாக ஏறிட்டுப் பார்த்தான். இடும்பன் சிலைக்கு அருகே தானும் இன்னொரு சிலையாக நிற்கவேண்டும் போல் ஒரு எண்ணம் ஏற்பட்டது. உள்ளங்கையைப் பார்த்து, வேல் ரேகை இன்னும் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். முருகன், சூரபத்மனை வதம் செய்ததுபோல் தானும் தங்கையை அடித்து ஆட்கொள்ள வேண்டும் என்று நினைத்தபடி, வேலும், மயிலும் துணை என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே வீட்டை நெருங்கினான். வீட்டுக்குள் தங்கை அழுதுகொண்டிருந்தாள். அம்மாக்காரி தன் இளைய மகன் முத்துவின் கைகளைப் பிடித்துக்கொண்டு "கூலி வேலைக்கிப் போய். இவள் மாடா உழைச்ச காசுடா. சாராயத்துக்கு தகாத காசுடா. கடவுளே! நான் என்ன பண்ணுவேன்! இளையவன் கேடியா போயிட்டான்! மூத்தவன் பேடியா போயிட்டானே என்று புலம்பிக் கொண்டிருந்தாள். முத்து, அம்மாவின் பிடியில் இருந்து கைகளை விடுவித்துக் கொண்டு, அவளைக் கீழே தள்ளப்போனான். இந்த மாதிரி சமயங்களில், "எப்படியும் நாசமாப் போங்க... எனக்கு வெத்தில பாக்குக்கு வராத காசு. சாராயத்துக்குப் போவுது," என்று ஒதுங்கி கொள்பவன் வேல்சாமி. ஒரு சமயம் மட்டும் ஒதுங்காமல் இருந்தபோது, தம்பிக்காரன் அம்மா விழ வேண்டிய இடத்தில், அண்ணனைத் தள்ளினான். இப்போதும் முத்து அம்மாவைக் கீழே தள்ளுவதற்காக உடம்பை வளைத்தபோது தங்கைக்காரி தாயைத் தாங்கிப் பிடிக்கக் கையை விரித்தாள். வேல்சாமி சுவரில் தொங்கிய காலண்டரைப் பார்த்தான். அதில் முருகன் படம் வேலோடு நின்றது. வேல்சாமி தனக்குள்ளேயே சொல்லி கொண்டான். வேலும் மயிலும் துணை.