பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முத்துகளை ஆணிமுத்துகள் எனல் மரபு. அந்த 1330 ஆணி முத்துகளுள் ஓர் ஐம்பத்தொரு முத்துகளை மாதிரியாக எனது இந்த நூலில் அறிமுகப்படுத்தியுள்ளேன். யான் எழுதியுள்ள உரை விளக்கம் அறிமுகம் என்றால், இன்னும் அரிய பெரிய கருத்துகள் அமைந்திருக்கும் என்பது பெறப்படும்.

வைப்பு முறை:

யான் குறள்களை அமைத்திருக்கும் முறை புதுமையாகத் தெரியலாம். முதலில் காமத்துப்பால், அடுத்துப் பொருட்பால், மூன்றாவதாக அறத்துப்பால் என்ற முறையில் எனது வைப்புமுறை இருக்கும். ஒரு பாலின் குறள்களையே தொடர்ந்து சொல்வதினும், முப்பால் குறள்களையும் மாறி மாறி அமைத்துக்கொண்டு செல்வின், படிப்பவர்க்கு ஒரு வகைப் புத்துணர்வு உண்டாகலாம். அதனால் இவ்வாறு அமைத்துள்ளேன். வாழ்க்கையில் எந்தக் கேடும் செய்யாத மாறுதல் ஏற்கக் கூடியதுதானே!

கருத்து வேற்றுமை:

எனது உரை விளக்கத்தில் சில கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் தரப்பட்டுள்ளன. பரிதியார் உரையும் காலிங்கர் உரையுங்கூட, பெரும்பாலும் இவ்விருவரின் உரைகளோடு ஒத்திருக்கும். இவர்கட்குள் கருத்து வேற்றுமையும் சிறுபான்மையாக இருக்கும். எனவே, எனது உரை விளக்கத்திலும் கருத்து வேற்றுமை இருப்பதில் வியப்பில்லை. கருத்து வேற்றுமை. ஒரு வகையில் புதுமை காணும் திறன் வளர்ச்சிக்கு அறிகுறி.

திருக்குறள் நூல் முழுவதற்கும் இப்படி ஓர் உரை விளக்கம் எழுதவேண்டும் என்பது எனது வேணவா. அன்பர்களின் சார்வும் (ஆதரவும்) அகவை நீட்சியும் உடல் நலமும் பொருள் வளமும் இருப்பின் அது கைகூடலாம்.

எனது இந்த உரை விளக்க நூலைத் திறனாய்வு செய்பவர்களிடத்தில் என்னோடு கருத்து வேற்றுமை தோன்றலாம். ஏதோ துணிந்து இறங்கியுள்ளேன், அறிஞர்களின் நல்லாதரவை நாடுகிறேன்.

அறிமுக உரை எழுதிய பேராசிரியர் திரு. ச. அறவணனுக்கும், இந்நூலை நன்முறையில் அச்சிட்டுத் தந்த சிதம்பரம் சபாநாயகர் அச்சகத்தாருக்கும் மிகவும் நன்றி செலுத்துகிறேன். வணக்கம்.

சுந்தர. சண்முகன்
5-11-1991