பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

23



வில்லையா? அவன் கொல் என்பதில் கொல் என்பது. இதை அவனா செய்தான்-அவன் செய்திருக்க முடியுமா என ஐயப்பொருளைத் (சந்தேகம்) தருகின்றது.

இக்குறளிலும் அதே ஐயப்பொருள் தான். தெய்வப் பெண்ணோ-அல்லது மயிலோ-அல்லது மனிதப் பெண்ணோ என ஐயுறுகிறான். ஓ என்பது ஐயப்பொருள் தரும் என எவரும் இலக்கண நூல்களில் வெளிப்படையாய்ச் சொல்லவில்லைதான். ஆனால் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். இலக்கியங் கண்டதற்குத்தானே இலக்கணம்? அந்தப் பொருள் அழகைக் காண்போம்.

மனித இயல்புக்கு அப்பாற்பட்ட அழகும் தோற்றமும் கொண்டு நின்றிருந்த அவ்வுருவைக்கண்டதும், முதலில், அணங்கோ என ஐயுற்றான். ஆடவனைக் கண்ட அவ்வுருவம் மயில் போல் அப்பால் சாய்ந்து ஒதுங்கிற்று. உடனே அவனுக்கு மயிலின்சாயல் நினைவுக்கு வந்தது. அணங்கென்று ஐயுற்றோமே, இது மயிலோ என்று மேலும் ஐயத்தின்மேல் ஐயம் அழுத்தமாகக் கொள்கின்றான். அவனது ஐய உணர்ச்சியின் இருமடங்கு அழுத்தத்தைத் தான் கொல்லோ என்பதில் உள்ள ‘ஓ’ அறிவிக்கின்றது. ஐயோ என்பது முதல் படி; ஐயையோ என்பது அதற்கும் மேல் படி. பலே என்பது முதல்படி பலே பலே என்பது அதற்கும் மேல்படி; இவை போலவே, கொல் (அணங்கு கொல்) என்பது முதல் படி; கொல்லோ (ஆய் மயில் கொல்லோ) என்பது முன்னதற்கும் மேல்படி. இந்த நுட்பத்தை உணர்ந்து சுவைத்து மகிழவேண்டாவா?

இதைத்தான் இக்குறளின் உயர்நிலைக் (உச்சி) கட்டம் என்று குறித்தேன். கொல், கொல்லோ புரியாமல் இக் குறளைக் கற்பது எவ்வாறு? பின்வரும் இடங்களிலும் உதவும் என்று கருதி ஈண்டு விரிவாக எழுதிவிட்டேன்.