பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

ஆழ்கடலில்


என்னும் புற நானூற்றுப் (94) பாடலால் அறியலாம். இப்படிப்போல, சங்க நூல்களில் இன்னும் பலப்பல எடுத்துக் காட்டுகள் உள. எனவே, மன்னன் தன்னை நாடிவந்தோர்க்கு எளிதில் கிடைக்கும் பொருளாயிருக்க வேண்டும். அவ்வாறிருந்தால்தான், மக்களின் குறைகளையும் முறைகளையும் நேரில் அறிந்து போக்கவியலும். இன்னும், காட்சிக்கெளியன் என்பதற்கு, எங்கும் தோன்றிப் பழகுவான் என்றும், எங்கும் சென்று காணலாம் என்றும் மேலும் இருபொருள் கூறலாம்.

அடுத்து, கடுஞ்சொல்லன் 'அல்லனேல்' என்றார் ஆசிரியர். ஏன் 'இன் சொல்லன்' என்றிருக்கலாமே! இல்லை; இன்சொல்கூட வேண்டியதில்லை; கடுஞ்சொல் இல்லாதிருந்தால் போதும். அரசன் சில குற்றங்களைக் கண்டிக்கும் போது இன்சொல் கூறமுடியாமற் போகலாம். ஆனால் கடுஞ்சொல்லின்றி நடு நிலையில் நடந்து கொள்வது நன்று,

இந்தக் குறளினை இக்கால முறைக்கு வைத்துப் பார்ப்போம், இப்போது பொதுமக்கள் அரசாங்கத்துக்கு ஒரு குறை தெரிவித்தால், அது பல கைக்கு மாறிப் பதிலுருவத்தில் மக்களின் கைக்கு வரப் பல நாட்கள் ( திங்களும்) ஆகலாம். அந்தத் தாள்கட்டு 'சிவப்பு நாடா'வால் கட்டப்பட்டுக் கிடக்கும். இதற்குத்தான் 'சிவப்பு நாடாமுறை' என்று பெயர். இந்நிலை கூடாது. மக்கள் வேண்டுகிற குறைகளையும் வெளியிடுகின்ற முறைகளையும் அரசன் நேரில் அறிந்து உடனுக்குடன் ஆவன புரியவேண்டும், அதாவது 'சிவப்பு நாடா முறை' ஒழிய வேண்டும் என வள்ளுவர் கூறுகின்றார். இப்போது அரசியலார் இதில் கண் செலுத்தியிருப்பதாகத் தெரிகிறது.