பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

ஆழ்கடலில்


கண்ணுக்கு மேலும் மேலும் அழகு தருவது இயற்கைதானே! இயற்கையாகவே வருத்துங் கண்ணோடு இந்தப் புருவமும் சேர்ந்து கொண்டால் இவன் என்ன ஆவான்? அதனால் தான் புருவத்தைக் 'கொடும் புருவம்' என்கிறான்.

இங்கே சொல்லப்பட்டுள்ள 'கொடுமை' (கொடும்) என்னுஞ் சொல்லுக்கு, பொல்லாத கொடிய தன்மை எனவும் வளைவு எனவும் இரு பொருள் உண்டு. இவற்றுள் முதல் பொருளை எல்லோரும் எளிதில் அறிவர். வளைவு என்ற பொருள் தான் பலருக்குத் தெரியாது. அவர்களும் தெரிந்தும் தெரியாமல் இச் சொல்லை - இப்பொருளில் வைத்துப் பேசுகின்றனர், மக்கள் அகராதியைப் (பேச்சு வழக்கை) புரட்டுவோம். கொடுவாள் கத்தி, கொடுக்காய்ப் புளி மரம் என்னும் பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள 'கொடு' (கொடுமை) என்னும் சொல், வளைந்தவாள், வளைந்த காய் என வளைவுப் பொருளைத் தருவதுணர்க. இந்த இரு பொருள் (சிலேடை) அழகு தோன்றக் 'கொடும்புருவம்' என்றான் அவன். புருவம் வளைந்து தானே இருக்கும்? புருவம் வில்போல் வளைந்திருப்பதால், விற்புருவம்- புருவ வில் என்றெல்லாம் புலவர்கள் உவமமும் உருவகமும் செய்வது வழக்கம், அதனால் 'கொடும் (வளைந்த) புருவம்' என்றது சரியே! மேலும், வருத்துகின்ற கண்ணுக்குத் துணையாய் நின்று கொடுமை செய்வதால் 'கொடும் பொல்லாத கொடிய) புருவம்' என்றதும் சரியே! ஒரே சொல்லில் இரு பொருள் அமைத்து விளையாடும் வள்ளுவரின் சொல் நயமும் பொருள் நயமும் என்னே, என்னே! மேலும் சில அழகு காண்பாம்.

புருவத்தின் புறப்பாட்டைக் காணுங்கால், அது கண்ணை மறைக்க வேண்டுமென்றால் மறைத்திருக்கலாம்; ஆனால், அவ்வாறு செய்யவில்லை என்பது புலனாகும். இரண்டு கண்களுக்கும் நடுவிடம் இருக்கிறதே. அங்கிருந்து.