பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனிமுத்துகள்


களையெல்லாம் இவ்வில்லறத்திலேயே பெறலாம் என்பது அவர்தம் கருத்து. உண்மைதானே!

உள்ளத்தில் ஒழுங்கு இல்லாமல், முற்றத் துறந்த முனிவரெனச் சொல்லிக்கொண்டு, காட்டில் திரிந்து தான் என்ன பயன்? காற்றை உண்டுதான் என்ன பயன்? கந்தலைக் கட்டி ஓட்டைச் சுமந்து இரந்து உண்டுதான் என்ன பயன்? ஒன்றும் இல்லை. எல்லாம் வெளிப்பகட்டே! ஆனால், பெண்ணுடன் வீட்டிலேயிருந்து சிற்றின்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், உள்ளத்தில் ஒழுங்கு உடையவர்கள் பேரின்பத்தையும் பெறுவார்கள். இதனை முற்றத் துறந்த முனிவரும் நுகர்ந்து கண்டவரும் (அனுபவ சாலியும்) ஆகிய பட்டினத்தாரே பகர்ந்துள்ளார்:

"காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தை சுற்றி
ஓடே எடுத்தென்ன உள்ளன்பு இலாதவர் ஓங்கு
[விண்ணோர்
நாடேய் இடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே"

என்பது பட்டினத்தடிகளின் பாடல், (நாரியர் - பெண்டிர்) பெண்ணுடன் இருப்பவர்கள் வீட்டுலகப் பேரின்பத்தையும் பெறுவார்கள் எனில், இவ்வுலக இன்பங்கள் எல்லாவற்றையுங்கூட எய்த முடியும் என்பதில் எள்ளளவு ஐயமும் இல்லையன்றோ? இன்னும் இப்பாடலுக்கு. வீட்டுலகம் (மோட்சம்) சென்று பெறும் பேரின்பத்தை இவ்வுலகிலேயே இல்லறத்தில் மனைவியுடன் இருந்து வாழ்ந்துகொண்டே பெற்றுவிடலாம் என்றும் பொருள் உரைத்துக் கொள்ளலாம். இந்தப் பாடலுக்கு எடுத்துக் காட்டு வேண்டுமானால் திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறே போதுமே!