பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

ஆழ்கடலில்


என்பன அவை. "இம் மூன்றும்" ஒருங்கு அமையப்பெற்ற அரசன் சொல்படியே, நினைத்தபடியே மக்கள் நடப்பர் என்பது குறட் கருத்து, அங்ஙனமெனில், இதிலுள்ள மறை பொருள் (இரகசியம்) யாது?

'பணம் பத்தும் செய்யும்', 'பணம் பாதாளம் வரையும் பாயும்', 'பணக்காரனைச் சுற்றிப் பத்துப் பேர் என்றும் இருப்பர்' என்னும் பழமொழிகள் அறிவிப்பது என்ன? பணம் படைத்த பலர், பணத்தை எலும்புத் துண்டாகப் போட்டு, பாமரர் முதல் படித்தவர்வரை பணியவைத்து, நீர் சொட்ட நாக்கைத் தொங்கவிட்டு வால் குழைக்கச் செய்கின்றனர் - என்பதுதானே இப்பழமொழிகளின் உட்கிடை? இந்தப் பணக்காரர்கள் காலால் இட்ட வேலையை அந்த நாய்கள் தலையால் செய்வதெல்லாம் பணம் கொடுக்கும் வரையில்தான். பாராட்டுவது எல்லாம் எதிரில் மட்டுந்தான். இதற்குக் காரணம் என்ன? பணம் கொடுப்பவர்கள் வாங்குபவரின் நன்மைக்காகக் கொடுப்பதில்லை; தங்கள் நன்மைக்காகவே கொடுக்கிறார்கள். ஆனால், இந்தக் குறளில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னனிடத்தில் மக்களுக்கிருக்கும் ஈடுபாடு, மகாகனம் பண மூட்டைக்கும் 'உயர்திருவாளர்' எலும்புத் துண்டுக்கும் இடையே உள்ள ஈடுபாடு போன்றதன்று. பின் என்ன? பெற்றோர்க்கும் பிள்ளைக்கும் உள்ள ஈடுபாடாகும் அது! பெற்றோர் - பிள்ளை என்ற பிறகு, விளக்கம் வேறு வேண்டியதில்லை, மன்னனும் மக்களும் அப்படித்தானே?

ஒவ்வொரு சொல்லையும் தொடரையும் ஊன்றி நோக்கல் வேண்டும். இன்சொலால் அளித்தல் - சத்து அளித்தல் - இன்சொலால் ஈதல் - இன்சொலால் ஈத்து அளித்தல் -- இவ்வாறெல்லாம் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க, இந்த உயர் நிலை எல்லோர்க்கும் இயலுமா?