பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

119


- அல்லது மன்னவன்; அதுபற்றியே மன்னனுக்குக் காவலன், புரவலன் (காத்தல் = புரத்தல்) என்ற பெயர்களும் தமிழ் மொழியில் உண்டு; இந்தக் கருத்தை அறிவிக்க வந்தவர் போல் காப்பாற்றும் மன்னவன்" என்றார் ஆசிரியர், காப்பாற்றுபவன் என்றால் கடனுக்கு அழுபவனல்லன்; யார் யார்க்கு என்னென்ன தீர்ப்பு வழங்க வேண்டுமோ - யார் யாரிடத்தில் எப்படியெப்படி நடந்து கொள்ளவேண்டுமோ, அந்தந்த முறைப்படி செங்கோலாட்சி செலுத்துபவன் என்பதையறிவிக்கவே "முறை செய்து காப்பாற்று மன்னவன்" என்றார். மக்களுக்கும் மன்னனுக்கும் உள்ள உறவு முறையின் இறுக்கத்தை. 'மக்கட்கு இறை' என்பதிலுள்ள நான்காம் வேற்றுமை உருபாகிய 'கு' அறிவித்து நிற்கிறது என்பதை இலக்கணம் நன்கு கற்ற எல்லோரும் உணர்வர். முரட்டு நாத்திகரும் அல்லாத - குருட்டு ஆத்திகரும் அல்லாத நம் திருவள்ளுவர் 'மன்னனே மக்கட்கு இறை' என்று 'ஏ' இட்டு உறுதிப்படுத்திக் கூறினால், எங்கே தமக்கும் நாத்திகப் பட்டம் வந்து விடுமோ என்று சூழ்ந்து, "அப்படி நான் கருதவில்லை; மன்னன் உலகினரால் இறையென்று வைக்கப்படுவான்" என உலகினரின் தலைமேலே பழியைப் போட்டுத் தாம் பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக் கொள்ள முயல்பவரைப் போல, "இறை யென்று வைக்கப்படும்" என மூன்றாந்தர முடிபில் கூறியுள்ள அழகு தான் என்னே!

"ஆண்டவன் நிலையில் உள்ள அரசியல் தலைவர்களே! நீங்கள் உலகத்தைக் காத்து ஆளப்போகின்றீர்களா? அல்லது - அழிக்கத்தான் போகின்றீர்களா? என்ன செய்ய இருக்கின்றீர்கள்? "என்று இன்றைய சில அரசியல் சூதாட்ட அரங்கினரை எச்சரிப்பதுபோல் இந்தக் குறள் தோன்றுகிறதல்லவா?