பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

183


நலத்தைக் கெடுத்துக்கொண்ட ஒருவனைப்போல, ஐவகை யின்பங்களையும் அளவின்றி நுகர்ந்து அழிவது அறிவுடைமையாகுமா? காய், கனிகளை அரியக் கொடுத்த கத்தியால் கையையே அரிந்து கொள்ளலாமா? சமைப்பதற்கு மூட்டிய நெருப்பால் வீட்டையே கொளுத்திவிடலாமா? எனவே, சுவை முதலிய ஐந்தினையும், அவை காரணமாக உள்ள ஐம்பூதம், ஐம்பொறி முதலியவற்றின் அமைப்பையும் ஆராய்ந்துணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்பவரே உலகில் உயர்ந்தவராகி, நினைத்தவற்றையெல்லாம் வெற்றியுடன் முடிப்பார்கள். இத்தகைய பெரியோர்க்கு உலகம் கட்டுப்படாமல் என்ன செய்யமுடியும்? உடலமைப்பினையும், நோயினையும், அதன் காரணத்தையும், போக்கும் வழி யினையும் அறிந்து அதற்கேற்ப மருத்துவம் செய்யும் மருத்துவர்க்கு நோயாளி கட்டுப்பட்டுத் தானே தீர வேண்டும்? இது போல!

உலகு-எழுவாய்; தெரிவான்கட்டு - பயனிலை. கண்+டு -- கட்டு. கண் இடப்பொருளை உணர்த்தும் ஏழாம் வேற்றுமை உருபு. டு குறிப்பு வினைமுற்று விகுதி.

(மண -உரை) சுவை முதலாகக் கூறிய ஐந்து புலன்களின் வகையை ஆராய்வான் கண்ணதே உலகம்.

(பரி-உரை) சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன் மாத்திரைகள் ஐந்தன து கூறுபாட்டையும் ஆராய்வான் அறிவின் கண்ணதே உலகம்.

வெகுளி காத்தல்
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்த லரிது.

குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது.