பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

131


'புரட்சி யகராதி' என்னும் பெயரில் ஓர் அகராதி தொகுக்கும்படி எனக்கு ஆணையிட்டால், கற்றல் என்றால் நிற்றல் என்றே கூட நான் பொருள் எழுதி வைத்து விடுவேன். இதற்கு நிகண்டு போன்ற மேற்கோள் சான்றாக இந்தக் குறளையே எடுத்துக்காட்டி விடுவேன். பின்னே என்ன? படிப்புக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லாமல் எத்தனையோ பேர் தருக்கித் தடுமாறித் திரிகிறார்களே, அவர்களைப் படித்தவர்கள் என்று எவ்வாறு அழைப்பது? இந்தக் 'கறிக்கு உதவாக ஏட்டுச் சுரைக்காய்களையும்', 'புள்ளிக்கு உதவாத பள்ளிக் கணக்கர்களையும்' என்னென்பது! அதனால்தான், அண்ணல் காந்தியடிகள் கூட, வாழ்க்கைக்குப் பயன்படும்படியான - வாழ்க்கைக்கு ஆதாரமான கல்வியைப் பயிற்றுங்கள் என்று அறிவுரை தந்தார்கள். அவர்களது முறையினை நாம் ஆதாரக்கல்வி (Basic Education) என்றழைக்கிறோம், இதைத்தான், வள்ளுவப் பெருமானார், கற்று நிற்க - நிற்கக் கற்க என்று அப்போதே அறிவித்துப் போந்தார். இனி இக்குறளின் சொல் நயங்கட்குச் செல்வாம்:

பள்ளிக்கூடத்துக்கு வெளியிலே பயனற்ற ஏடுகளைப் படிப்பது மட்டுமல்ல - பள்ளிக்கூடத்திலேயுங்கூட பிற்கால வாழ்க்கைக்குப் பயன்படாத பல செய்திகள் படிக்கப்படுகின்றனவே, அது கூடாது. வாழ்க்கைக்குப் பயன்படுவனவே கற்கப்படவேண்டியனவாம். கற்கக் கூடாதவற்றைக் கற்றுக் காலத்தைக் குறைத்துக் கொள்ளற்க; கற்கவேண்டியவற்றையே கற்பீராக, என்று சொல்ல வந்தவர் போல் "கற்பவை கற்க" என்றார் ஆசிரியர். மூன்றாண்டுகள் முற்றுங்கற்றாலும் முடிவுபெறாத ஒரு தேர்வுக்கு (பரிட்சைக்கு) உரிய நூல்களை நான் மூன்றே திங்களில் கற்று முடித்துத் தேர்வு எழுதி வெற்றியும் பெற்றுவிட்டேன் என்று வெட்கமில்லாமல் மார்புதட்டிப் பெருமை