பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

153


(ஏழமை) யாகும். எனவே, உடையவர் முன் இல்லாதவர் ஏங்கி நிற்றல்போல, கற்றார் முன் கல்லாதார் கைகட்டி நிற்றற் குரியர் என்பது கருத்து, உலகில் நடப்பது தானே.


அறத்துப்பால்


மனைமாட்சி

(தெளிவுரை) மனைவியிடம் குடும்பப் பண்புகள்-- சிறப்புகள் இல்லையாயின் வேறு எது நிறைந்திருப்பினும் வாழ்க்கை சிறவாது.

"மனைமாட்சி யில்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்"

(பதவுரை) இல்லாள்கண் = மனைவியிடத்தில், மனைமாட்சி இல்லாயின் - மனையறத்துக்கு (குடும்பத்துக்கு) வேண்டிய சிறப்புப் பண்புகள் இல்லாமற்போனால், வாழ்க்கை - (அவளைத் துணையாகக்கொண்டு நடாத்தும்) குடும்ப வாழ்க்கையானது. எனை மாட்சித் தாயினும் = வேறு எத்தகைய மாட்சிமையை - அதாவது - செல்வம், புகழ் போன்ற சிறப்பினை உடையதாக இருந்தாலும், இல் = ஒன்றும் இல்லாததாகவே கருதப்படும். (இல்லாள் = மனைவி; எனை = எந்தவிதமான).

மணக்குடவர் உரை) குடிக்குத் தக்க வொழுக்கம் மனையாள் மாட்டு இல்லையாகில், அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம்.

(பரிமேலழகர் உரை) மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவனில்லாளிடத் தில்லையாயின் அவ்வில் வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமை யுடைத்தாயினும் அஃதுடைத்தன்று .