பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

ஆழ்கடலில்


வனாகக் கூறியுள்ளார் வள்ளுவர், முறையே அவை வருமாறு:-

ஒன்று - உலகின் முதற் பொருளாயிருப்பவன்; இரண்டு வாலறிவன்; மூன்று-மலர்மிசை யேகினான்; நான்குவேண்டுதல் வேண்டாமை யிலான்; ஐந்து - இறைவன் (இறைவன் என்றால் எங்கும் எல்லோர்க்கும் தலைவனாய்த் தங்கியிருப்பவன் என்பது பொருள்): ஆறு - பொறிவாயில் ஐந்தவித்தான்; எழு-தனக்குவமையில்லாதான்; எட்டு - அறவாழி அந்தணன் என்பனவாம். இங்ஙனம் முதல் எட்டுக் குறள்களிலும் எட்டு இயல்புகளைச் சொல்லிக்கொண்டு வந்து, பின்பு ஒன்பதாவது குறளில் எண்குணத்தான் என்றால், முன்கூறிய எட்டுக் குணங்களை உடையவன் என்று பொருள் கூறுவதில் என்ன பிழை? பத்தாவது குறளில் புதிதாக ஒரு குணமும் சொல்லவில்லை. முற்கூறிய இறைவன் என்பதையே குறிப்பிட்டுள்ளார். எனவே, வலிந்து பிற கொள்கைகளைக் கொண்டுவந்து திணிப்பதைக் காட்டிலும், ஆசிரியரின் கூற்றையே கொள்வது நல்ல குறிக்கோ ளல்லவா? இவ்வெட்டினையும் எச்சமயத்தார் தான் இல்லையென்று மறுக்கமுடியும்?

"தலையே நீ வணங்காய்" (திரு அங்கமாலை 1)
"தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை"
(பொது)

என்னும் நாவுக்கரசரின் நன்மொழிகள் ஈண்டு ஒப்புநோக்கத் தக்கன.

பிறவிக் கடல் நீந்தல்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

(மண- உரை) பிறவியாகிய பெரிய கடலை நீந்தி யேறுவர் இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதார் அதனுள் அழுந்துவர்.