பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

ஆழ்கடலில்


தொடுதல் என்றால், மண்ணை ஊடுருவிச் சென்று உள்ளேயிருக்கும் தண்ணீரைத் தொடுதலோ? இங்கே இன்னும் ஓரழகு என்னவென்றால் கற்றல் (கல்வி) என்பதின் பகுதியாகிய கல் (கல்லுதல்) என்பதற்கும் தோண்டுதல் -- துருவுதல் என்றுதான் பொருள் , மேலும் இங்கே 'ஊறும்' என்ற சொல்லையும் அன்றி நோக்கவேண்டும். ஊறுதல் - ஊற்றெடுத்தல் என்றால், உள்ளேயிருக்கிற பொருள் வெளிப்பட்டுப் பெருகுதல் தானே! கல்வி பற்றிய உள நூல் கொள்கையும் இது தானே!

இன்னும் இங்கே. 'மணற்கேணி', 'மாந்தர்க்கு' என்னும் சொற்களையும் துருவி நோக்கவேண்டும். 'கற்றனைத் தூறும் அறிவு' என்று சொன்னால் போதாதா? 'மாந்தர்க்கு' என்று வேறு சொல்லவேண்டுமா? அவ்வாறு சொல்லாவிடின் மாட்டுக்கு அறிவு ஊறும் என்று சொன்னதாக எவரேனும் எண்ணி விடுவாரா? 'மாந்தர்க்கு' என்று கூறியதில் கருத்து மிகவுண்டு. மாந்தருள் பலர், விலங்குகளைப் போலப் படிக்காதவரா யுள்ளனர், விலங்குகள் அன்றைக்கு இருந்தாற் போலவே இன்றைக்கும் இருக்கின்றன - அன்றைக்கு வாழ்ந்த வாழ்க்கையே இன்றைக்கும் வாழ்கின்றன. அந்தோ! மக்களுள்ளும் பலர் அவற்றைப் போலவே இன்றும் இருக்கின்றனரே! என்ன எளிமை!

விலங்குகளின் தலையெழுத்து இவர்களுக்கு வேண்டியதில்லையே. இவர்கள் அவற்றினும் தனியறிவு பெற்றவர்களாயிற்றே! அவ்வறிவை மேலும் கல்வியினால் வளர்த்துக் கொள்ளலாமே! அப்படியிருந்தும் விலங்கு வாழ்க்கை வாழ்கின்றனரே! இனியாயினும் உணர்ந்து திருந்துவார்களாக! - என்றெல்லாம் சுட்டிக்காட்டி எச்சரிக்க விரும்பியவர் போல் 'மாந்தர்க்கு ஊறும் அறிவு' என்றார் ஆசிரியர் வள்ளுவனார். இதற்கேற்பவே உவமையினையும் அமைத்துக் கொண்டார், அதாவது 'கேணி' என்று கூறியுள்ளார்.