பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

147


(மணக்குடவர் உரை) கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்; கல்லா தவர் முகத்தின் கண்ணே இரண்டு புண்ணுடையரென்று சொல்லப்படுவர்.

(பரிமேலழகர் உரை) கண்ணுடையரென்று உயர்த்துச் சொல்லப்படுவார் கற்றவரே; மற்றைக் கல்லாதவர் முகத்தின் கண் இரண்டு புண்ணுடையர், கண்ணிலர்.

(விரிவுரை) வள்ளுவர் இந்தக் குறளில் கல்லாதாரை அச்சுறுத்தி மிரட்டியிருக்கிறார்- இல்லையில்லை - உண்மையை எடுத்துரைத்து எச்சரித்திருக்கிறார். ஆம், இஃதோர் எச்சரிக்கையே! சென்னையை அடுத்துள்ள பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) என்னும் ஊரிலுள்ள அரசினர் கண்ணில்லார் பள்ளிக்கு ஒருமுறை யான் சென்றிருந்தேன் -- சொற் பொழிவும் ஆற்றினேன். அன்றைய நாள் எனக்கு ஒரு மறுபிறவியாகும். கண்ணிலாரை நூற்றுக்கணக்கில் காணும் எவரும்- கல் நெஞ்சினராயினும் - கலங்கிவிடுவர்; கோழை நெஞ்சினராயின் கோவென்று கதறி அழுதேவிடுவர். அங்கே அவர்களைக் கண்ட பிறகுதான், எனக்குக் கண்ணென ஒரு பொருள் இருப்பதாகவும், அது மிக மிக இன்றியமையாததாகவும், அதைக் கவனமுடன் காக்கவேண்டும் என்பதாகவும் அது போய்விட்டால் வாழ்க்கையில் பெரிதும் இடர்ப்பட நேரிடும் என்பதாகவும், அங்கே கண்ணில்லாத அவர்களே பல தொழில்களைச் செய்யும்போது நாம் எவ்வளவோ செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதாகவும் உணர்ந்தேன். அங்கேதான் அப்பொழுதுதான் எனக்கு உண்மையிலேயே கண்கள் திறந்தன. என் கண்களைத் திறப்பதற்காகத் தங்கள் கண்களைப்போக்கிக் கொண்ட கண்ணப்பர்கள் அல்லவா அவர்கள்? இவற்றையெல்லாம் அவர்களிடம் ஒளியாது எடுத்துச் சொன்னேன். அவர்கட்குத் துணிவும் தன்னம்பிக்கையும் ஊட்டினேன், எனக்குக் கண்ணிருந்தும் கண்ணாடி மாட்டிக் கொண்டிருப்பதாகச்