பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

ஆழ்கடலில்


'இறந்தமைந்த சார்புடைய ராயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்'

முதலிய குறள்கள், பெரியார்க்குச் சிறுபான்மை சினம் தோன்றுமாயின் பிறர் தடுக்கமுடியாது என்னும் பொருளை அறிவிக்கவில்லையா? எனவே, குணமென்னும் குன்றேறி நின்றார்' என்னும் குறளுக்கு, மேற்கூறிய குறள்களையெல்லாம் விளக்கவுரையாக அமைத்தார் ஆசிரியர் என்றியம்புவதால் வரும் தடையென்ன? மற்றும், ஏனையோர்க்கு மிகுதியாகச் சினந்தோன்ற, பெரியோர்க்குமட்டும் எப்போதோ ஒரு கண நேரமே தோன்றுவதற்குக் காரணம், அவர்கள் குணமென்னும் குன்றேறி நின்றவர்கள் என்று ஆசிரியர் இயம்பியுள்ள குறிப்புக் குறிப்பா யுணர்வோர்க்குப் புலனாகும். மேலும் அன்பு நெறியும் (அகிம்சை) அளவுமீறி யிருத்தலாகாது. அளவுமீறின் அதுவும் நஞ்சாய்க் கொல்லும். ஆதலின் ஏதோ ஒரு நேரத்திலாயினும் மாதிரிக்காயினும் சினங்காட்டினால்தான் சீர்திருந்தும் உலகம். இல்லாவிடின் ஏய்க்கும். ஏன், திருவள்ளுவரிடம் பாடம் படித்துப் பழகிக் கொள்ளலாமே! அவர் பல இடங்களில் உலகைச் சீறியுள்ளாரே தம் பாடல்களால்!

ஈண்டு, சிவப்பிரகாச அடிகளாரின் பிரபுலிங்க லீலை - சித்தராமையா கதியில் உள்ள

'மேவுறு தவமத வெகுளி தாளினி
ஓவுறும் தரத்த தன்று ஒருவரானுமே' (35)

என்னும் பாடல் பகுதி ஒப்பு நோக்கத்தக்கது.

உறுதி, உயர் பெருமை ஆகியவை காரணமாகக் குணம் குன்றாக உருவகிக்கப்பட்டுள்ளது.