பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்கடலில்

189


பெருமை குன்றும் என்பதை அறிவிப்பதற்காக "நெடுங் கடலும்" என்றார். தன்னிடத்தே மிக்க நீர் இருப்பினும் பயனில்லை என்பதை அறிவிப்பதற்காகத் தன்மை குன்றும் என்னாது நீர்மை" குன்றும் என்றார். மேகம் கடலினிடத்திலிருந்து நீரைக் கடன் வாங்குகின்றது என்னும் இழிவு தோன்றாதபடியும், கடல் நீரைக் குறைக்கின்றது என்னும் ஆற்றல் தோன்றும்படியும், வாங்கி என்னாது தடிந்து என்றார். மேகத்தின் வள்ளல் தன்மை தோன்றுவதற்காகப் பெய்தல் என்னாது "நல்காதாகி என்றார். மழையில்லா விட்டால் கடல் அழியும் என்று கூறினால், ஆசிரியர் வலிந்து புனைந்துரைத்து மழைக்குப் பெருமை தேடுகின்றார் என்று உலகம் தம்மைப் பழிக்கும் எனக் கருதி அழியும் என்னும் சொல்லைப் பெய்யாமல், மழையில்லாவிட்டால் கடலின் வளமும் ஓரளவு குறையும் என்னும் பொருளில் "குன்றும்" என்னும் சொல்லைப் பெய்து திருவள்ளுவர் தப்பித்துக் கொண்டுள்ளதை நோக்கின் மனம் மகிழவில்லையா? ஆசிரியரின் நுண்மாண் நுழை புலத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு வேண்டுமானால் இக்குறள் ஒன்றே போதுமே!

(மண- உரை) நிலமேயன்றி நெடிய கடலும் தனது தன்மை குறையும், மின்னி மழையானது பெய்யாவிடின்.

(பரி- உரை) அளவில்லாத கடலும் தன்னியல்பு குறையும், மேகந்தான் அதனைக் குறைத்து அதன்கட் பெய்யாது விடுமாயின்.

துப்பாய மழை
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை

துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு துப்பு ஆயதூஉம் மழை.