பக்கம்:அருளாளர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

நடராஜ தத்துவம்


திருவாசகங் காட்டும் திருநெறி 37

ஆறறிவுடைய மனிதன் தேடியலைவது வயிறு வளர்ப்பது ஒன்றைத்தானோ! அஃதுண்மை ஆயின் அவ்வாறு வயிறு நிரம்புதற்குரிய பல நலன்களும் உடையார் யாரும் சுகமடைந்திருந்தார் என்பதை யாண்டும் கேட்டிலேம் ஆதலால் மனிதன் இவற்றினும் மேம்பட்ட ஒரு பொருளைத் தேடியே வருந்துகின்றானென்பது அங்கை நெல்லிக்கனியாம். அத்தகைய பொருள் மன அமைதி யென்ற ஒன்றேயன்றோ! இதனை உட்கொண்டேயன்றோ ‘Man does not live by bread alone, but by every word of God!’ என்ற மூதுரையும் எழாநின்றது. ஆதலின், இவ்வமைதியை நாடுவதே உயிர்களின் நோக்கம் என்பது தேற்றமாயின் அவ் அமைதியை அடைந்து பின்னர் மற்றையோர்க்கு அவ்வழியை எடுத்துக் கூறும் பெரியோரை பின்பற்றுவதில் பிழையென்ன? அத்தகைய அமைதியைத் தரும் பொருள் இறைவனேயன்றோ! அதனையே நமது பெருமான்

“தந்த(து) உன்தன்னைக் கொண்ட(து) என்தன்னைச்

சங்கரா ஆர்கொலோ சதுரர்? அந்த மொன்(று) இல்லா ஆனந்தம் பெற்றேன் யான்’

(திருவா22-10)

என்று கூறுகிறார். எனவே, அத்தகைய பொருளை அடைய வேண்டுவது யாவர்க்கும் இன்றியமையாதது ஆகின்றது.

அவ்வாறு முழு முதலைத் தேடி அடையப் புறப்படும் உயிர் அவ் எண்ணம் தன்பால் வரப்பெறு முன் அடையும் இன்னல்கள் ஒன்றா இரண்டா? அளவற்ற இன்னல் களுக்கு ஆட்பட்ட பின்னரே தெய்வம் என்பதோர் சித்தமேனும் உண்டாகின்றது. அதனையும் நமது மணி மொழியார் எடுத்து விளக்கினார். கருவிடைத் தோன்றும் உயிர் பத்துத் திங்களிலும் உண்டாம் இன்னல்களில் பிழைத்துப் பிறந்து ஓரளவு வளர்ந்த பின்னர் மீண்டும் அடைகின்ற இன்னல்கள் எத்தனை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/46&oldid=1291396" இலிருந்து மீள்விக்கப்பட்டது