பக்கம்:அருளாளர்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மாழ்வார் 81

தன்னையன்றிப் பிரிதொரு பொருள் இல்லை என்று வந்துவிட்டமையின் சொல்லடா? நீ சொன்ன அரி யாண்டுளன்? என்று கேட்கும் அளவிற்கு வளர்ந்து விட்டான் இரணியன். இராவணன், சூரபதுமன் முதலிய அனைவரும் இதே குணத்தைப் பெற்றவர்களேயாவர். இத்தகைய மாபெரும் அகங்காரத்தைச் சாதாரணமான அன்பு, அறம், அருள் முதலியவை வெல்ல முடியாதென முன்னர்க் குறிப்பிட்டோமன்றோ? அப்படியானால் இந்தப் பேரகங்காரம் அழிவது எப்படி? முழுமுதற் பொருள் அதாவது பேரொளி நேரே வந்தால்தான் இந்தப் பேரிருளைப் போக்க முடியும். பேரகங்காரம் என்பது பேரிருள், எனவே இதனை அழிக்கக் கூடிய பொருள் பேரொளியாகிய முழுமுதற் பொருளே ஆகும்.

இதில் வியப்பு என்னவெனில் இந்தப் பேரகங்காரம் இறுதிவரைப் போராடி இறுதியில் அழிக்கப்பெறுமே தவிர இடையில் தன் பிழையை உணர்ந்து திருந்துவதோ மாறுவதோ இல்லை பிற உயிர்கள் போல் அன்போ, அன்றித் தன்னிடமே கூட அன்போ கொள்ளாத ஒரு பெரிய அகங்காரமாதலின் தான் வாழவேண்டும் என்பதற்காகக் கூட விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லை.

இத்தகைய பேரகங்காரத்தின் மறுதலையான ஆழ்வார்கள், நாயன்மார்கள் பற்றி மறுபடியும் ஆயத்தொடங்கும் பொழுது மற்றோர் ஐயம் தோன்றி விடுகிறது. முழுமுதற் பொருள் இப்பெருமக்களிடம் குடிகொண்டு இவர்களைக் கருவியாக்கிப் பேசும் பேச்சுக்கள் நம்போன்ற எளியவர்கட்குப் பயன்படுமா? நம்மை ஒத்த நிலையில் உள்ளவர்கள் தம் அனுபவத்தைக் கூறினால் நாமும் அதில் பங்கு கொள்ளமுடியும். நம்முடைய நிலையில் இருந்து கற்பனைக்கெட்டாத உயரத்தில் உள்ள இப்பெருமக்கள் கூறும் அறவுரைகள் நமக்கு எங்கே பயன்படப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/90&oldid=1291509" இலிருந்து மீள்விக்கப்பட்டது