பக்கம்:அருளாளர்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 அருளாளர்கள்

பொறிகளின் வன்மை உலகறிந்த ஒன்று. அவற்றின் வன்மையை எடுத்துக் கூறவந்த பெரியார், விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை என்று கூறுகிறார். தேவர்கள் என்று போற்றப் படும் சிறப்புடையவர்கள் அவர்கள். அதுமட்டுமன்று; தேவருலகத்திலிருந்தும் வீணே தம் புண்ணியப் பயனை அனுபவியாது பெருமானுக்கு அடிமை செய்ய வேண்டும், அதுவே இப்பிறப்பின் பயன் என்று உண்மையை அறிந்து பணி செய்கின்றார்களாம். அவர்களைக் கூட இப் புலன்கள் விடுவதில்லையாம். அவர்களையும் 'செறும்' கோபித்துத் துன்புறுத்தும் என்று பேசுகிறார். திருமாலுக்கு அடிமை பூண்ட தேவரையும் கோபித்துத் துன்புறுத்தும் இயல்புடைய இப்பொறி புலன்கள் மண்ணிடை வாழும் என்னை என்னதான் செய்யமாட்டா? என்று ஏங்குகிறார் பெருமான்.

இத்துணை வலிமையுடைய இப்பொறி புலன்கள் எவ்வாறு துன்புறுத்துகின்றன என்றும் விளக்கமாகப் பேசுகிறார் பெரியார். 'வன்பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து ஏற்றுகின்றனர்’ என்று பேசுவார் பத்தாம் பாடலில் (ஐந்து புலன்களும் வலிமையுடைய பாரத்தை எளிதாகப் பற்றி எடுத்து திசை திசை ஏற்றுகின்றனவாம். அப்படிப்பட்ட வலிமையும் கொடுமை செய்யும் இயல்பும் உடைய ஐவர்க்கு நாம் எம்மாத்திரம் என்ற பொருள்படப் பாடிச் செல்கிறார் பெரியார்,

அப்படியானால் இத்துணைக் கொடுமை செய்யும் இப் பொறி புலன்களை வெல்லும் வழி யாது? பொறி களைத் தனியே நம்மால் வெல்ல முடியாது என்பது உறுதி. என்றால் துணைசேர்த்துக் கொண்டு வெல்ல முயல வேண்டும். பொறிகளின் இடைப்பட்டு அல்லலுறும் நாம் நம்மைப் போலவே பொறிகளிடைப்பட்டு அவதியுறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/97&oldid=1291636" இலிருந்து மீள்விக்கப்பட்டது