பக்கம்:அருளாளர்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206 * அருளாளர்கள்



அதனாலே தன்னுடைய ஆன்மிக வளர்ச்சியோ அல்லது வீடு பேற்றையோ அடைய வேண்டுமென்று ஒரு சிறிதும் நினைக்கவில்லை. இந்த உலகத்திலே என் கண்ணுக்கு முன்னாலே துன்பப்படுகின்ற மக்களுடைய துன்பத்தை, உயிர்களுடைய துன்பத்தை, ஏன், செடி கொடிகளுடைய துன்பத்தைப் போக்க வேண்டும், அதற்குரிய ஆற்றல் எனக்கு வேண்டுமென்று கேட்கும் போது இந்தத் தமிழ்நாட்டுப் பண்பாட்டின் சிகரத்தை அடைந்துவிடுகிறார் வள்ளற்பெருமான்.

உயிர்கள் தத்தம் வினைக்கு ஏற்ப நன்மை தீமைகளை அனுபவிக்கின்றன. இதில் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை என்ற கொள்கை தமிழகத்தில் தொன்று தொட்டே இருந்து வருகிறது. புறநானூற்றில், தீதும் நன்றும் பிறர்தர வாரா (புற-192) என்று கணியன் பூங்குன்றன் பாடுவதும் இக்கருத்தின் அடிப்படையிலேயே ஆகும். உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவ (குறள்) என்று தான் வள்ளுவனும் பாடினான். பிறருடைய துயரை தன்நோய் போல் போற்ற வேண்டும் என்ற அளவில்தான் தமிழர் கொள்கை இருந்ததே தவிர 19ஆம் நூற்றாண்டு முடிய அதற்கு மேல் சென்றதாகத் தெரியவில்லை. ஆழ்வார்கள், நாயன்மார்கள் தனிப்பட்டவர்களின் துயரத்தைப் போக்கினார்களே தவிர, உலகம் முழுவதற்கும், உயிர்கள் அனைத்திற்கும் இதைச் செய்ய முன் வரவில்லை.

இந்த அடிப்படையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எல்லா உயிர்களின் துன்பத்தையும் போக்க ஒரு வரம் வேண்டும் என்கிறார் வள்ளலார். அவரை அடியொற்றி வந்த மகாகவி சுப்பிரமணிய பாரதி இதே போன்று ஒரு வரத்தை விநாயகப் பெருமானிடம் கேட்பதை அவன் கவிதைகளில் காண முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/217&oldid=1292002" இலிருந்து மீள்விக்கப்பட்டது