பக்கம்:அருளாளர்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடைத்துக் கொண்டிருக்கின்ற பெரிய அகங்காரமாகும் (Super Ego) அது. எனவே அதில் நாடு, மக்கள், பிறஉயிர், தன்மனைவி, மகன் என்ற எந்தப் பாசத்திற்கோ அன்பிற்கோ இடமே இல்லை. அனைத்தையும் உண்டுவிட்டுப் பரம்பொருள் போல் எங்கும் வியாபித்து நிற்கின்ற பேரகங்காரமாகும் அது. பரம்பொருள்போல் எங்கும் வியாபித்து நிற்பது இந்தப் பேரகங்காரம் எனில் பரம்பொருளுக்கும் இதற்கும் வேற்றுமை இல்லையோ என நினைக்கலாம். வேற்றுமை உண்டு. அது ஒளிக்கும் இருளுக்கும் இடையே உள்ள வேற்றுமையேயாகும். ஒளி புகாத இடமில்லை ஆனால், ஒளிபுகாத நேரத்தில் இருள்தானே அந்த இடத்தை ஆக்ரமித்துக் கொள்ளுகிறது. அதுபோல இறைவன் அருள் இல்லாத காரணத்தால் இரணியனுடைய அகங்காரம் சர்வமும் நானே என்று வியாபித்து நிற்கிறது.

நம்மிடம் உள்ள அகங்காரம் சிறியது ஆகையாலும் அன்பு முதலியவை வளர்வதாலும் ஓரளவு குறைந்து கொண்டே வருகிறது. அந்த அன்பு மிகுதியும் வளர்ந்து அருளாகப் பரிணமிக்கும் பொழுது இந்த அகங்காரம் ஏறத்தாழ மறைந்து விடுகிறது. எனவே அகங்காரம் நம்மைப்போல் சிறியதாக இருக்கின்றபொழுது அதனை அழிக்க அன்பு, அருள், கருணை முதலிய ஆயுதங்கள் போதுமானவையாகும்.

ஆனால் சர்வத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு அண்டமுற நிமிர்ந்த அகங்காரத்தை அழிப்பது மிகமிகக் கடினமான காரியமாகும். தன்னையன்றி வேறு ஒரு பொருளையோ, உயிரையோ இந்தப் பேரகங்காரம் மதிப்பதில்லை; ஏற்றுக் கொள்வதுமில்லை. உலகில் உள்ள எந்தப் பொருளும் தன்னைப் போற்றி ஏற்றஞ்செய்யவே படைக்கப்பட்டன என்று கருதும் அளவிற்கு வளர்ந்து விட்டது இந்தப் பேரகங்காரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/89&oldid=1291502" இலிருந்து மீள்விக்கப்பட்டது