பக்கம்:அருளாளர்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளலார் கண்ட வாழ்வு நெறி 211

கோயிலுக்குச் சென்றால் இந்த முறையில் வழிபட வேண்டும். இன்ன பிரசாதங்கள் படைக்க வேண்டும். இன்ன பூவினால் வழிபட வேண்டும் என்றெல்லாம் எழுதி வைத்து உண்மையான பக்தி என்பதற்கு அங்கே இடமே இல்லாமல் செய்துவிட்ட ஒரு சூழ்நிலை 19ஆம் நூற்றாண்டில் பரிபூரணமாக நிலவியிருந்தது.

கோயில்கள், ஏசுபெருமான் காலத்தில் இருந்தது போல கயவர்களுடைய இருப்பிடமாகவும், வாணிகத்தலமாகவும் மாறிவிட்டதால் சிதம்பரத்தில் அவர் கண்ட காட்சியால் அவருடைய மனம் துடித்தது. மாபெரும் சமய தத்துவத்தை அறிந்த பெருமகனார், இன்று நடைபெறுகின்ற நடைமுறையைப் பார்த்தபோது என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றார். உடனே அவரையும் அறியாமல் ஒரு சினம் ஏற்படுகின்றது. சாத்திரங்கள் என்று எழுதி வைத்து, இவற்றை நடைமுறையில் கொண்டுவர வேண்டுமென்று விரும்பிய சமுதாயத்தை நினைந்து வருந்துகின்றார். இதைக் குப்பை என்று ஒதுக்க வேண்டும். உண்மையாக இறைவனிடத்தில் ஈடுபாடு ஏற்படுமே யானால் உனக்கும் அவனுக்குமுள்ள தொடர்பை நீ அறிந்து கொள்ள முடியுமேயானால் இந்தச் சாத்திரக் குப்பை தேவையே இல்லை. இறைவன் உள்ளத்தின் உள்ளே உறைகின்றான். எல்லா உயிர்களிலும் அவன் இருக்கின்றான். ஆகவே அவனுக்கும் நமக்குமுள்ள தொடர்பு என்ன என்பதை அறிந்துகொள்ளக் கூடிய இயைபு கிடைத்துவிடுமேயானால் சாத்திர சம்பிரதாயமான வழிபாட்டு முறைகள் தேவையில்லை என்ற ஒரு மிகப் பெரிய கருத்தை இங்கே பேசுகின்றார். சாத்திரங்கள் என்ற பெயரில் எழுதி வைக்கப் பெற்றவை அறிவின் துணைகொண்டு எழுதப் பெற்றவையாகும். அவை மனிதனுடைய புறவாழ்வும் இந்த உடம்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/222&oldid=1291997" இலிருந்து மீள்விக்கப்பட்டது