பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ஆத்மாவின் ராகங்கள்

'யாரோ நாகமங்கலம் ஜமீன்தார்னிங்களே? யாரது...?”

'அதான் அன்னிக்கிக் கோவில்லே பாத்தீங்களாமே தம்பி கழுத்திலே தங்கச் சங்கிலியோட இருந்திருப்பாரே'

"அவர் எதுக்கு அங்கே வருகிறார்?"

'எப்பவாவது அவரும், திருவேங்கடம் முதலியாரும், தென்கரை வக்கீலும் வீணை கேட்க வருவாங்க...'

சிறிது நேரம் ஒன்றும் பேசத் தோன்றாமல் நின்றான் ராஜாராமன். வாளியையும் கும்மட்டி அடுப்பையும் அவன் கையிலிருந்து வாங்கிக் கொண்டு மாடி வரை உடன் வந்து கொடுத்து விட்டுப் புறப்பட்டார் பத்தர்.

அறையில் குப்பென்று மல்லிகைப் பூ வாசனை கமகமத்தது. ராஜாராமன் திரும்பிப் பார்த்தான். வாசகசாலைச் சுவரிலிருந்த காந்தி படம், திலகர் படம், பாரதியார் படம் எல்லாவற்றிற்கும் மல்லிகைப் பூச்சரம் போட்டிருந்தது. இது மதுரத்தின் வேலையாகத்தான் இருக்க வேண்டுமென்று தோன்றியது. மொட்டை மாடியை இணைக்கும் படிக்கு மேலே மரநிலைதான் உண்டு, கதவு கிடையாது. ஆனாலும், பின்பக்கத்து மொட்டைமாடிச் சுவருக்கும் வாசகசாலை மொட்டைமாடிச் சுவருக்கும் நடுவே முக்கால்பாக நீளம் இடைவெளி உண்டே எப்படித் தாவி வர முடியும் என்பது அவனுக்கு வியப்பாகவே இருந்தது. சந்தேகத்தோடு மேலே படியேறிப் போய்ப் பார்த்தான் அவன். இரண்டு சுவர்களையும் ஒரு பழைய ஊஞ்சல் பலகை பாலம் போட்டாற்போல இணைத்துக் கொண்டிருந்தது. அவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மதுரம் வெள்ளித்தட்டில் - ஆவி பறக்கும் இட்லிகளுடன் அந்தப் பலகை வழியே ஏறி நடந்து வந்தாள். அவள் கையில் இலையும் இருந்தது.

ராஜாராமனுக்குத் திடீரென்று அவளைக் கேலிசெய்து பார்க்க வேண்டுமென்று தோன்றியது.