பக்கம்:அருளாளர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. திருவாசகத்தில் விஞ்ஞானம்

"திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்பது இன்றும் வழங்கும் பழமொழி ஆகும். மனிதன் பெற்றுள்ள பேறுகளுள் சிறந்த ஒன்று அவன் எப்பொழுதாவது பெறும் மன உருக்கமாகும். வெறும் அறிவைமட்டும் துணைகொண்டு வாழ வேண்டும் என்று மனிதன் என்றைக்கு நினைத்தானோ, அன்று தொடங்கிற்று உலகிற்குக் கேடுகாலம். விலங்கினங்களும் கூடத் தம் குட்டிகளிடத்து அன்பு செலுத்துகின்றன. அவற்றைப் பிரிய நேரும் பொழுது மனம் வருந்தி உருகுகின்றன. ஆனால், மனிதன் மட்டும் இவ்விதிக்கு விலக்காக இருக்கவேண்டும் என்று மனிதருள் சிலர் நினைக்கத் தொடங்கி விட்டனர். உருகும் இந்த இயல்புதான் மனிதனை மனிதனாகச் செய்யும் பண்பாடு என்பதை ஏனோ உலகம் மறக்க முற்பட்டு விட்டது! மனித மனம் உருக வேண்டுமானால் அதற்குத் துணைபுரியக் கருவிகள் சில வேண்டும். அழிந்துபோகும் பொருள்களை நினைந்து பயனற்ற முறையில் உருகாமல், பயனுடைய முறையில் இவ்வுருக்கம் தோன்றல் வேண்டும். இது கருதியே நம் பெரியவர்கள் தம்முடைய மனம் சென்று பற்றவும், உருக்கம் கிடைக்கவும் கடவுளைக் கொண்டனர். கடவுள் இடத்தில் கொண்ட ஈடுபாடும் உருக்கமும் உலகிலும் அவர்கள் செம்மையாக வாழப் பயன்பட்டன. கடவுளிடத்தில் அன்பு செய்து, உருகிப் பழகிய அவர்கள் மனம் பிறர் துயரம் கண்ட வழியுங்கூட அனலிடைப் பட்ட மெழுகென உருகலாயிற்று. கடவுள்மாட்டு அவர்கள் கொண்ட உருக்கத்தால், சிலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/52&oldid=1291431" இலிருந்து மீள்விக்கப்பட்டது