பக்கம்:அருளாளர்கள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்த யோகசுவாமிகள் *239

பெற்றிருந்தது என்பதை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் ஆதலால் தான் இதனை விரிவாக எழுத முற்பட்டேன்.

1955 வாக்கில் யாழ்ப்பாணத்தை அடுத்துள்ள கரணவாய்தெற்கு என்ற ஊரில் பத்துநாட்கள் தொடர்ந்து சொற்பொழிவு செய்வதாக ஒப்புக் கொண்டு சென்றேன். மலாய்நாட்டு ஓய்வூதியம் பெறும் முருகப்பு என்பவர் வீட்டில் தங்கியிருந்தேன். பகல் முழுவதும் வேலையில்லை ஆதலாலும், இரவு ஒரு மணிக்கு சொற்பொழிவு தொடங்குவதாலும் அன்பர்கள் சிலர் எனக்காக ஒரு காரைக் கொடுத்து பகலில் எங்குவேண்டுமானாலும் போய் வர ஏற்பாடு செய்தார்கள். முதல்நாள் சொற்பொழிவு முடிந்து வழக்கம்போல் சுவாமிகளிடம் சென்று வணங்கி வழிபட்டு இரவு மீண்டுவிட்டேன்.

மறுநாள் பொழுது விடிந்தவுடன் பல்தேய்த்துக் கொண்டு நின்றேன். நண்பர் முருகப்பு வாலாயமாகக் கேட்கின்ற “நன்கு உறங்கினர்களோ ஐயா" என்ற கேள்வியைக் கேட்டார். அவருக்கு பதில்கூறத் தொடங்கி னேன். ஆனால் வாயிலிருந்து ஒரு சொல்லும் வரவில்லை; காற்றுத்தான் வெளிவந்தது. எவ்வளவு முயன்றும் ஒரு எழுத்தைக்கூட உச்சரிக்க முடியவில்லை. அதிர்ந்துபோன நான் என்னசெய்வது என்றறியாமல் திகைத்தேன். ஒன்பது மணியளவில் காரை நானே ஒட்டிச்சென்று சாவகச் சேரியில் ஒய்வுபெற்றிருந்த தொண்டை, காது, மூக்குநோய் நிபுண மருத்துவரை காணச்சென்று என் குறையை அவரிடம் எழுதிக் காட்டினேன். அவர் சோதனை செய்துவிட்டு இன்று மாலை உங்களுடன் ஒருவரை அனுப்புகிறேன். கொழும்பில் சென்று சில சோதனைகள் நடத்திய பிறகு மருத்துவம் செய்யலாம் என்று கூறினார். அவரிடம் எழுதிக் காட்டும் பொழுது Paralysis of Vocal chord என்று எழுதிக்காட்டினேன். அவருடைய வாக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/250&oldid=1292113" இலிருந்து மீள்விக்கப்பட்டது