பக்கம்:அருளாளர்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திருவிளையாடலும், பரஞ்சோதியாரும் *129

காலமாக இந்தப் பரம்பொருள் ஒரு காலைத் தூக்கி ஆடிக் கொண்டே இருக்கிறானே, அவனுக்கு எவ்வளவு உடம்பு வலிக்குமென்று நினைக்கிறான். நேரே வெள்ளியம் பலத்திற்குச் சென்றான். ஐயா, தயவு செய்து ஊன்றிய காலைத் தூக்கி, தூக்கிய காலை ஊன்றிக் கொண்டு ஆடு என்றான். இறைவன் சட்டை செய்யவில்லை போல இருக்கிறது. இராஜசேகரன் நினைத்தான், சிலமணி நேரம் பரதம் பயின்றதற்கே என்னுடைய உடம்பு இப்படி வலிக்கு மானால், உனக்கு எப்படி வலிக்கும், தயவு செய்து காலை மாற்று நீ இல்லையென்றால் இந்தக் கொடுமையை என்னால் எண்ணிப் பார்க்க முடியாது. இந்த வாளில் விழுந்து என்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறேன் என்று வேண்டினானாம். அவனுக்காக இந்த அண்டபிண்ட சராசரத்தில் எங்குமில்லாத முறையில் இறைவன் காலை மாற்றிக் கொண்டு ஆடினான். அதுதான் கால்மாறி ஆடிய திருவிளையாடல் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கதையிலும் மிகுதியும் உயர்ந்ததாகிய அந்தப் பரம் பொருள் வடிவம் இல்லாதது, அதனால் அதற்கு உடம்பில் வலியும் இல்லை என்ற தத்துவம் அறியாதவனல்ல இராஜசேகர பாண்டியன். 64 கலை ஞானமும் கற்றவன். இந்தச் சாதாரண விஷயத்தைத் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது. ஆனால் பக்தனாக மாறிவிட்ட போது இறைவன் அவனுக்குத் தோழன் ஆகிவிடுகிறான். அவனுக்கு ஏற்பட்ட நலன்கள், தீங்குகள் இறைவனுக்கும் உண்டென்று நினைப்பது எல்லையில்லா அன்பின் பாற்படுமே தவிர,அறியாமையின் பாற் படாது. மகன் எவ்வளவு வலுவுடையவனாக இருந்தாலும் அவன் ஒரு வேலையும் செய்யக்கூடாதென்று தாய் நினைக்கிறாள். ஆனால் அது அறியாமையின் பாற்பட்டதல்ல. தாயின் அன்பின் பாற்பட்டது. அதுபோல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/140&oldid=1291909" இலிருந்து மீள்விக்கப்பட்டது