பக்கம்:அருளாளர்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவிளையாடலும்,பரஞ்சோதியாரும் *109


பெருமான். அப்படிப்பட்ட தமிழ் நாட்டின் தலைநகராகிய மதுரையிலே, தமிழ்க் கடவுளாகிய சொக்கனைப்பற்றிப் பாடிய பாடல்கள் முதன் முதலிலே தமிழில் வராமல் வேறொரு மொழியில் வந்திருக்குமென்று நினைப்பது அவ்வளவு பொருத்த முடையதல்ல. ஆனால் என்ன காரணத்தாலோ இடைக்காலத்திலே, எல்லாவற்றையும் வடமொழியில் இருந்து வந்ததென்று சொல்வதிலே ஒரு பெருமை அடைந்திருக்கிறார்கள். அந்த முறையிலே திருவிளையாடல் புராணத்தைப் பார்த்து இயற்றப்பட்ட ஆலாசிய மகாத்மியம் என்ற நூல் ஒன்று உண்டு. அது, நம்பி திருவிளையாடலுக்கு ரொம்ப பிற்பட்ட ஒன்று. அந்த ஆலாசிய மான்மியத்திலிருந்து தான் பரஞ்சோதியார் திருவிளையாடலை இயற்றினார் என்று சொல்லி வருகிற நம்பிக்கைகளும், கதைகளும் எவ்வாறோ வளர்ந்துவிட்டன. வடமொழிப் பயிற்சி மிகுதியாக உடையவராகையால் பரஞ்சோதியார் அந்த வடமொழி அடிப்படையிலே மன்னர்களுடைய பெயர்களைச் சொல்லிக் கொண்டே வருகிறார். செல்லிநகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி அப்படிச் சொல்வதேயில்லை. ஆனால் பரஞ்சோதியார், ஒவ்வொரு திருவிளையாடலைப் பொறுத்த மட்டிலும், இது இன்ன பாண்டியன் காலத்திலே நடைபெற்றது என்று சொல்லுவார். அப்படிச் சொல்லப் படுகின்ற பாண்டியர்கள் பலருடைய பெயர்கள் வடமொழிப் பெயர்களாக இருக்கின்றன. ஆகையால் பிற்காலத்துப் புலவராகிய அவர் காலத்தில் அப்படி வழங்கி வந்திருக்க வேண்டு மென்று நினைப்பது தவிர வேறு ஒன்றும் அதில் புதுமையில்லை. அவருடைய வரலாற்றைப் பற்றி நமக்கு அதிகமாக ஒன்றும் தெரியவில்லை. மதுரையில் தங்கி, இறைவனுடைய ஆணையை மேற்கொண்டு, இந்த அறிய நூலைப் பாடினார் என்று சொல்லுவதைத் தவிர, அவருடைய வரலாற்றைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/120&oldid=1291613" இலிருந்து மீள்விக்கப்பட்டது