பக்கம்:அருளாளர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74அருளாளர்கள்

இத்தகைய முறையில் ஆழ்வார் ஒருவரிடம் மட்டும் நிறைந்தானா என்றால் அனைத்துயிர்களிடமும் இவ்விதமே நிறைகின்றானாம். ஆனால், அதை அறிவார் இலாத குறையால் அவன் அனைத்துயிர்களிடமும் அந்தர்யாமியாய் இருத்தலை உயிர்கள் அறிவதில்லை. உயிர்கள் யான் என்று பேசும்போது அறியாமை காரணமாகத் தான் என்று ஒரு பொருள் இருப்பதாக நினைக்கின்றனவே தவிர உண்மையில் தான்’ என்ற ஒன்று இல்லை. அதனை உணரவல்லார்கட்கு, அவன் உள்ளே கலந்து உயிருண்டு கலந்து நிற்றல் எவ்வாறு இருக்கும் எனப் பெரியார் இதோ கூறுகிறார். “தானே யாகி, நிறைந்து, எல்லா

  உலகும் உயிரும் தானே ஆய் தானே யான் என்பான் ஆகி. . . 
                (நாலா: 314)

என்ற அடிகளில் பிறர் அறியாத இந்த உண்மையைக் கூறிவிட்டு, அறிந்தவர்கட்கு அக்கலப்பு எவ்வாறு இருக்கும் என்பதையும் இதோ கூறுகிறார்.

“தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்

தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே’

              (நாலா 2214)

இந்நிலையில் ஆழ்வார் என்ற ஒரு பொருளும் அவரால் வழிபடப்படுகின்ற இறைவன் என்ற ஒரு பொருளும் இடை நின்ற பக்தி என்ற ஒரு பொருளும் ஆக மூன்றாக இருந்த நிலைபோக எஞ்சியது ஒன்றேயாம். பாலும் நெய்யும் கலந்தது போல் கலந்தொழிந்தோம் என்கிறார் ஆழ்வார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/83&oldid=1291610" இலிருந்து மீள்விக்கப்பட்டது