பக்கம்:அங்கும் இங்கும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

அங்கிருந்து அடுத்ததற்கு விரைந்தோம். ஏதோ உள்ளுர் விவகாரம் பற்றி ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். பேச்சு காரமாகவே இருந்தது. இப்படி உள்ளுர், பிராந்தியச் சிக்கல்கள் பற்றிய கருத்துரைகள், இரண்டொன்றையும், சிறிது சிறிது கேட்டுவிட்டு, ஒரு பெருங்கூட்டத்திற்கு வந்து சேர்ந்தோம் அன்று நாங்கள் கண்ட அத்தனைக் கூட்டங்களிலும் பெரியது அது. கூடியிருந்தார், அதிகம் இருந்தால், இருநூறு பேராக இருக்கலாம். பத்தும் பதினைந்தும், முப்பதும் முப்பத்தைந்துமே கண்ட யாருக்குமே இருநூறு பேர் கொண்ட கூட்டம் பெரிதாகத்தானே இருக்கும். அக் கூட்டத்தின் பேச்சாளர், ஒரு நீக்ரோ. அவர் ஆத்திரத்தோடு பேசிக்கொண்டிருந்தார். நின்று கேட்டோம்.

வெள்ளையர்கள் ஆப்பிரிக்காவிற்கு வந்து நீக்ரோக்களை அடிமைப்படுத்தி வருவதை வன்மையாகக் கண்டித்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு இனி வெள்ளையர் எவரும் ஆப்பிரிக்காவில் காலடி வைத்தால், அவ்வெள்ளையரின் கழுத்தை அறுத்து இரத்தத்தை உறிஞ்சப் போவதாக ஆர்ப்பரித்தார். இதைக் கேட்ட நாங்கள் பதறிப்போனோம். ‘கலாட்டா’ ஆகி விடுமென்று அஞ்சினோம், மெல்ல நழுவி விடலாமாவென்று கருதினோம். சுற்றுமுற்றும் பார்த்தோம். வெள்ளையர் யாரும் வெகுளவில்லை, துடிக்கவில்லை, அஞ்சவில்லை.

அப்போது அங்கிருந்த இளந்தம்பதிகள் எங்கள் கண்களில் பட்டனர். கணவன் மனைவியிடம் கூறினார் ; “கண்ணே! இவர் ஏதோ உணர்ச்சி வயப்பட்டிருக்கிறார். அதற்குக் காரணமும் இருக்க வேண்டும். நாம் பொறுமையாக இருந்து, காரணத்தைக் கேட்போம். இதைக் கேட்ட மனைவியும் புன் முறுவலோடு கவனமாகக் கேட்டார். பேச்சு நீண்டது. ஆனால், சூடு சிறிது தணிந்தது. நாங்களும் மெதுவாக நழுவிவிட்டோம். மேலும் சில சிறு கூட்டங்களைக் கடந்த பின், ஐம்பது பேருடைய கூட்டம் ஒன்றை அடைந்தோம். அது, அராஜகக் கூட்டம்.