பக்கம்:அங்கும் இங்கும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

“ஆட்சிகள் அத்தனையும் மக்கள் உரிமையைப் பறிக்கின்றன. உரிமையை இட்லர் பறித்தாலும் ஒன்றே, சர்ச்சில் எடுத்துக் கொண்டாலும் ஒன்றே, அட்லி அடக்கினாலும் ஒன்றே. ஆகவே ஆட்சிமுறை வேண்டா. தேர்தலில்நாள் குறித்திருந்தார்கள்-யாருக்கும் ஒட்டுப் போடாதீர்கள். இதைக் கேளாமல் சிலர் ஒட்டுப் போட்டால் பெருங்கெடுதி இல்லை. யார் வெற்றி பெற்றாலும், இலட்சம் வாக்குகளுக்குப் பதில் ஆயிரம் ஒட்டுகளே பெற்று, வென்றால். தலை கொழுத்துத் திரியமாட்டார். வாக்கினைப் பயன்படுத்தியவர்களைவிட, பயன்படுத்தாதவர் பல பேர் என்ற தெளிவு நிதானத்தைக் கொடுக்கும்”-இப்படிப்பட்ட போக்கிலே ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.

அவர்கள் தேர்தலைப் பற்றியோ, இக்கருத்தைப் பற்றியோ கவலைப்படாமல், விரைவில் விலகிப் போனோம். வீடு திரும்ப, மீண்டும் வந்த வழியே சென்றோம். முன்னர் பார்த்த கூட்டங்களில் சில முடிந்துவிட்டன. நீக்ரோவர் பேசிய கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மறுபடியும் அங்குச் சில நிமிடங்கள் நின்றோம். கூட்டத்தினரைக் கவனித்தோம் பலர் ஏற்கெனவே இருந்தவர்களே. யாரும் துடிப்போ, கிளர்ச்சியோ கொள்ளவில்லை. கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

வெளிநாட்டார் ஒருவர், இலண்டனுக்கு வந்து அங்குள்ள வசதிகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொண்டு, அவ் வெள்ளையரையே அவ்வளவு மிரட்ட விடலாமா ? ஏன் அப்படி விட்டு வைக்கிறார்கள் ?’ என்று எங்களுக்கு ஐயம். அதைப் பல ஆசிரியர்களிடமும் மற்றவர்களிடமும் வெளியிட்டோம் .

அவ்வளவு பேச்சுரிமை இருப்பதைப் பற்றிப் பெருமிதம் கொண்டனர் ; புன்முறுவல் பூத்தனர். அதற்குச் சிறிதளவும் தடை விதிக்கக்கூடாதென்று அழுத்தந்திருத்தமாகக் கூறினர்.