பக்கம்:அண்ணா நாற்பது.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24. அண்ணாவின் சொற்கேட்கின் அலிகளும்ஆண் மைபெறுவர்
அண்ணாவின் மொழிகேட்கின் அயர்நரம்பும் முறுக்கேறும்
அண்ணாவின் உரைகேட்கின் அரையுடலும் எழுந்தாடும்
அண்ணாவின் ஒலிகேட்கின் அறுத்தகட்டை யுந்துளிர்க்கும்.


25. பெருமுனிவர் வாழும் பேரடவி யதனிடையே
ஒருதுறையில் மானுடன் உறுபுலிநீர் பருகுமெனத்
திருநூலில் கற்றதைத் தெளிந்துகொண்டோம் இஞ்ஞான்றே
இருகருத்தால் முரணுவோர் இணைந்திடுவர் அண்ணாமுன்!


26. சிரிப்பினால் முப்புரத்தைச் சிவபெருமான் சுட்டெரித்தார்
சிரிப்பினால் நம்மண்ணா செந்தழலை அணைத்திடுவார்
நெருப்புப் பொறிபறக்க நிலைமாறி வந்தவரும்
சிரிப்பு முகத்தோடு சென்றிடவே செய்திடுவார்.


27. அண்ணாவைக் காணின் அங்கண் ஒளிபெறும்
அண்ணாசொல் கேட்கின் அஞ்செவி குளிருமால்
அண்ணாசீர் பேசின் அணிநா வினிக்குமால்
அண்ணாவொடு பழகின் ஆருயிர் தளிர்க்குமால்.


28. எத்தனையோ கடவுளர்கட் கிந்நாட்டில் திருவிழாக்கள் எடுத்த யர்ந்தோம்
எத்தனையோ கடவுளரை இந்நாட்டில் ஊர்வலமாய் ஏந்தி வந்தோம்
எத்தனையோ கடவுளர்கட் கிந்நாட்டில் பூசனைகள் இயற்றி யுள்ளோம்
அத்தனைநங் கடவுளரும் அண்ணாபோல் பெருங்கூட்டம் அறிந்த துண்டோ!

10
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_நாற்பது.pdf/12&oldid=1030969" இலிருந்து மீள்விக்கப்பட்டது