பக்கம்:அங்கும் இங்கும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

யுள்ள சில இடங்களையும் எனக்கும் என்னுடன் வந்த கல்வியாளர் இருவர்க்கும் காட்டினர்.

அரசினருக்குச் சொந்தமான கூட்டுப்பண்ணை ஒன்றை நாங்கள் பார்த்தோம். அது நகருக்கு வெளியே சில கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. அப்பண்ணை பல ஆயிரம் ஏக்கர் பரப்பை உடையது. ஒரு பக்கத்தில் கண்ணுக்கெட்டும் தூரம் பருத்தி நிலம்; மற்றொரு பக்கம் தானியம் விளைந்த பூமி, வேறொரு பக்கம் பார்த்தால், காய்கறித் தோட்டம் நீண்டு அகன்று கிடந்தது. பழத்தோட்டமும் பரந்து கிடந்தது ஒருபுறம்.

தொலைவிலே மலையொன்று தென்பட்டது. அதன் மேலிருந்து ஓடிக்கொண்டிருந்த காட்டாறுகளை அணைகட்டி, தேக்கமாக்கி. (வாய்க்கால்கள் வெட்டி, இப்பண்ணையைப் போல்) நூற்றுக்கணக்கான பண்ணைகளுக்குப்-பெரும் பண்ணைகளுக்குப் பாசன வசதி செய்யப்பட்டிருப்பதாக எங்கள் வழிகாட்டி விளக்கினார். இரஷியப் புரட்சிக்கு முன்பு, இப்பண்ணைகளிலே பல, வானம் பார்த்த பூமியாக இருந்தனவாம். விளைச்சல் ’பட்டா பாக்கிய’ மாக இருந்தது மாறி இன்று நிச்சயமானதாகிவிட்டது; நிறைந்ததுமாகிவிட்டது.

ஆண்டுக்கு ஒரு முறை, ஊர்கள் பலவற்றை மூழ்கடித்து விட்டு, புரண்டோடும் இந்தியப் பேராறுகளையும் பல இடங்களில் அணையிட்டுத் தேக்கினால், வறண்ட பகுதிகளையும் வளமான பகுதிகளாக்க முடியாதா ? மின்சார உற்பத்தியை பல மடங்கு பெருக்கிச், சிற்றுார் தோறும் இப்புத்தொளியையும் புத்தாற்றலையும் கொடுத்து, மக்களைச் சிறு தொழில்களில் (குடிசைத்தொழில் என்ற வழக்கை விட்டுவிடுவது நல்லது) ஈடுபடுத்தி விட்டால், திட்டங்களின் பலன் பரவலாகி விடாதா ? இப்படி எண்ணி ஏங்கின எங்கள் உள்ளங்கள்.

பங்குச் சண்டையால் குடும்பப் பங்காளிகள் பாழாவதை போல், இராச்சியங்களுக்கிடையில் நிலவும் தண்ணிர்